நாடு முழுவதும் 95,000 வாக்காளர்களிடம் தேர்தலுக்கு பிந்தைய மெகா கருத்துக் கணிப்பை நியூஸ் 18 தொலைக்காட்சிக் குழுமம் நடத்தியுள்ளது. 21 மாநிலங்களில் உள்ள 518 மக்களவைத் தொகுதிகளில், வாக்குப்பதிவுக்குப் பிறகு வாக்காளர்களை நேரில் சந்தித்து அவர்களின் மனநிலையை நியூஸ் 18 குழுமம் அறிந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை வெளியிட்டது.
அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் திமுக கூட்டணி 36 முதல் 39 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 1 முதல் 3 கூட்டணியிலும், அதிமுக 0 முதல் 2 தொகுதிகள் வரையும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் பேசிய முன்னாள் ஆளுநரும் தென்சென்னை பாஜக வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன், “நாங்கள் தென்மாநிலங்களில் பலவீனமாக இருக்கிறோம் என எதிர்கட்சிகள் சொல்லும்போதே இந்த எண்ணிக்கையை பெறுகிறோம் என்றால் நிச்சயம் நாங்கள் பலமாக உள்ள வடமாநிலங்களில் அதிக இடங்களை பெறுவோம்.
தென்பகுதியில் அரசியல் என்பதே முற்றிலும் வேறானது. குறிப்பாக தமிழகத்தில் திராவிட கட்சிகளின் துணையில்லாமல் துணிச்சலாக ஒரு முடிவெடுத்து, கடுமையாக உழைத்து வாக்குகளை அதிகரித்திருக்கிறோம். இந்த கருத்துக்கணிப்புகளில் இருக்கும் இடங்களை விடவும் அதிக இடங்களை பெறும் என்பது தான் என்னுடைய கருத்து. இந்த தேர்தலில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறோம்.
திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு தேசிய கட்சி வரவேமுடியாது என்ற நிலை மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. 1967-க்கு பிறகு இது மிகப்பெரிய தாக்கம். இன்னும் அதிக இடங்களும் அதிக வாக்குகளும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
தமிழகத்தில் 1-3 தொகுதிகள் வரை கிடைக்கும் என கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த தொகுதிகளில் வெற்றி பெறும் என நான் கணித்து கூற விரும்பவில்லை. ஏனெனில் அனைத்து தொகுதிகளிலும் பாஜகவினர் சிறப்பாக பணியை செய்திருக்கிறார்கள். 3 தொகுதிகளை விடவும் அதிக இடங்களும் அதிக வாக்குகளும் வெற்றிபெறுவோம் என துணிச்சலாகவே சொல்கிறேன்.
இதையும் படிக்க:
மக்களவைத் தேர்தலில் வெல்லப் போவது யார்? – மாநிலம் வாரியாக கருத்துக்கணிப்பு முடிவுகள் இதோ!
மேலும் பிரதமர் தமிழகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அதிக முறை வந்தது எங்களுக்கு பக்கபலமாக இருந்தது. ஒரு வீட்டில் ஒருவராவது மத்திய அரசு திட்டத்தில் பயனடைந்திருப்பார். எனவே இந்த தேர்தல், இந்த அரசுக்கு நன்றி தெரிவிக்கும் தேர்தலாகவே பார்க்கிறேன்.
தமிழகத்தில் எதிர்கட்சிகள் பிரிந்திருந்ததால் தான் திமுக கூட்டணிக்கு இவ்வளவு இடங்கள் கிடைத்தது. ஆனால் தமிழகத்தில் வரும்காலத்தில் தாக்கத்தை ஏற்பத்துவதற்காகவே நாங்கள் தனித்து நின்றோம். என்னை பொறுத்தவரை இதைவிட அதிக இடங்களை பெறுவோம் என்றே எதிர்ப்பார்க்கிறேன்.
2019 தேர்தலையும் இந்த தேர்தலையும் நாம் ஒப்பிடமுடியாது. அப்போது திமுக ஆட்சியில் இல்லை. அவர்கள் மீது பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால் இப்போது அவர்கள் எப்படி ஆட்சி செய்கிறார்கள் என்று மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அதிக இடங்களை பெற வாய்ப்பு இருக்கிறதே தவிற, மக்களின் ஆதரவு பாஜகவிற்கு தான் உள்ளது.
தமிழகத்தை போலவே இந்திய அளவிலும் பாஜக அதிக இடங்களை பெற வாய்ப்புள்ளது. பாஜகவிற்கு 370 இடங்களும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 400 இடங்களும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
ஒரே நாளில் எதிர்கட்சிகள் ஒன்று சேரவே முடியவில்லை. இதில் எப்படி அவர்கள் ஒரே நாளில் எப்படி பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்யப்போகிறார்கள்? சுதந்திர இந்தியாவில் ஒரு பிரதமர் மூன்றாவது முறை வெற்றி பெறுவது ஒரு சரித்திர சான்று.
இதையெல்லாம் பார்க்கும்போது தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா அகிய மாநிலங்களில் நிரூபித்துக்கொண்டிருப்பது சாதனை தான்” என தெரிவித்தார்.
.