இதுகுறித்த அறிக்கையில், “தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுக்கடையில் விற்கப்படும் மது, பார்களிலும், சந்து கடைகளிலும் விற்பனை செய்யப்படும் கலால் வரி செலுத்தப்படாத மது, தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் கள்ளச்சாராயம் என மூன்று வகையான சாராயங்கள் தமிழ்நாட்டு மக்களின் உயிருக்கு கேடு விளைவித்து வருகின்றன. மதுவையும், கள்ளச்சாராயத்தையும் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்துவதற்காகத்தான் டாஸ்மாக் மது விற்பனை செய்யப்படுவதாக அரசுத் தரப்பில் கூறப்படு்கிறது. ஆனால், டாஸ்மாக் மதுவுக்கு இணையாக கள்ளச்சாராயமும் விற்பனை செய்யப்படுகிறது. எதையுமே கட்டுப்படுத்த முடியாத செயலற்ற நிலையில்தான் காவல்துறையும், அரசும் முடங்கிக் கிடக்கின்றன. சரியாக ஓராண்டுக்கு முன் தஞ்சாவூரில் டாஸ்மாக் கடையில் மது வாங்கி அருந்திய இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். அவர்கள் அருந்திய மதுவில் சயனைடு நஞ்சு கலக்கப்பட்டிருந்ததுதான் உயிரிழப்புக்கு காரணம் என்று தெரியவந்தது. அரசு மதுக்கடையில் விற்பனை செய்யப்பட்ட மதுவில் சயனைடு நஞ்சு எவ்வாறு கலக்கப்பட்டது என்ற வினாவுக்கு ஓராண்டாக விடை இல்லை. இது குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு ஆணையிடப்பட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை. தமிழ்நாடு அரசின் செயலற்ற தன்மைக்கு இதுவே சாட்சி.