மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் பழமையான தருமபுர ஆதீன மடம் உள்ளது. இந்த மடத்தில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாட்கள் குருபூஜை நடப்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான குருபூஜை கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. குருபூஜையின்போது மடத்தில் உள்ளஸ்ரீஞானபுரீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இந்த நிலையில், விழாவின் சிகர நிகழ்ச்சியான பட்டண பிரவேச நிகழ்ச்சி நேற்றிரவு 10 மணிக்கு நடைபெற்றது.
தருமபுர ஆதீன மடத்தில் 27ஆவது குரு மகா சன்னிதானத்தை சிவிகை பல்லக்கில் 72 பக்தர்கள் தூக்கிச் சென்றனர். தங்க கொரடு, பாதரட்சை, ஆபரணங்கள் அணிந்து பல்லக்கில் அமர்ந்திருந்த தருமபுர ஆதீனத்திற்கு, பொதுமக்கள் பூரண கும்ப மரியாதையுடன் தீபாராதனை எடுத்து வழிபட்டனர். மதுரை ஆதீனம், செங்கோல் ஆதீனம், சூரியனார் கோயில் ஆதீனம் உள்ளிட்ட ஆதீனகர்த்தர்கள் கலந்து கொண்டனர்.
அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள் உள்ளிட்ட பரிவாரங்களுடன் வீதி உலா நடைபெற்றது. மேலும், கிராமிய கலைநிகழ்ச்சிகளால் விழா களைகட்டியது. தருமபுரம் ஆதீனத்தை சிவமாக எண்ணி, சுமந்ததாக பல்லக்கு தூக்கியவர்கள் தெரிவித்தனர்.
பட்டண பிரவேச நிகழ்ச்சிக்கு, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தருமபுர ஆதீன மடத்தில் 360 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
.