திண்டுக்கல்லைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் மைத்துனர் கண்ணன். ஜெயலலிதா பேரவை மாநில இணைச் செயலாளராக உள்ளார். மேலும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஊராட்சி ஒன்றியத்தின் தலைவராக கண்ணன் உள்ளார். இதில் மொத்தமுள்ள 20 கவுன்சிலர்களில் அதிமுக கவுன்சிலர்கள் 15 பேர், திமுக கவுன்சிலர்கள் 5 பேர் உள்ளனர்.
இதனால் ஒன்றிய தலைவர் பதவியை அதிமு-கவைச் சேர்ந்த கண்ணன் பெற்றார். இந்நிலையில் அதிமுக கவுன்சிலர்கள் 5 பேர் திமுக-வில் இணைந்ததால் அதிமுக பலம் குறைந்தது. இதனால் தலைவர் பதவிக்கு நெருக்கடி உள்ளது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் ஜூன் 25-ம் தேதி 3 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள வளர்ச்சி பணிகளுக்கான டெண்டர் விடப்பட்டது. இதில் மன்ற ஒப்புதல் பெறாமல் நத்தம் ஊராட்சி ஒன்றியத் தலைவரும் அதிமுக நிர்வாகியுமான கண்ணன் தனிச்சையாக செயல்பட்டு அனுமதி அளித்துள்ளார் என புகார் எழுந்தது. இவ்விவகாரத்தை மாவட்ட கலெக்டர் விசாரணைக்கு உட்படுத்தினார்.
அந்த புகார் மீது முகாந்திரம் இருந்ததை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே ஊராட்சி ஒன்றிய தலைவரின் செயலுக்கு உடந்தையாக செயல்பட்டு அனுமதி அளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் கற்பகம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நம்பிதேவி, அலுவலக கணக்காளர் சிவக்குமார், அலுவலக உதவியாளர் கனகலட்சுமி ஆகியோரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி உத்தரவிட்டுள்ளார். மேலும், அந்த டெண்டரும் ரத்து செய்யப்பட்டுள்ளது.