கோவை மக்களவைத் தொகுதியில் அதிமுகவின் வாக்குகள் பெரும்பாலானவை திமுக கணக்கில் சேர்ந்திருப்பது தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என பார்க்கப்பட்ட சூழலில் கோவை தொகுதியை கோட்டைவிட்டதற்கான காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.
கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான கோவையில் பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.
கோவை தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 5.68 லட்சம் வாக்குகள் பெற்று சுமார் ஒரு லட்சத்து 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அதிமுக சார்பில் களமிறங்கிய சிங்கை ராமச்சந்திரனை வீழ்த்தி 4 லட்சத்து 50 ஆயிரத்து 132 வாக்குகளை பெற்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரண்டாம் இடத்தை பிடித்தார். அதிமுகவின் சிங்கை ராமச்சந்திரன் 2 லட்சத்து 36 ஆயிரத்து 490 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.
இதையும் படிக்க:
“தமிழகத்தில் பாஜக RCB போன்று தோற்றுக் கொண்டே இருக்கும்” – ஜெயக்குமார் விமர்சனம்!
கொங்கு மண்டலம் ‘அதிமுகவின் கோட்டை’ என அக்கட்சியினர் கூறிவரும் நிலையில், கோவை தொகுதியில் அதிமுக வாக்குகள் திமுகவிற்கு சென்றிருப்பது தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
2014 ஆம் ஆண்டு, பாஜகவுடன் கூட்டணி இல்லாமல் அதிமுக 4.3 லட்சம் வாக்குகளை பெற்றிருந்தது. 2019-ல் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிட்ட சி.பி. ராதா கிருஷ்ணன் 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று தோல்வியை தழுவினார்.
இந்நிலையில், அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் 2.3 லட்சமாக குறைந்துள்ளன. இந்த நிலையில், 2 லட்சம் வாக்குகள் சரிந்ததில் பாஜக அதிக லாபம் பெறவில்லை என்றாலும், திமுகவின் பக்கம் அதிமுகவின் வாக்குகள் சென்றிருப்பதை தரவுகள் காட்டுகின்றன.
2014 ஆம் ஆண்டு திமுக, கூட்டணி 3 லட்சத்து 8 ஆயிரத்து 242 வாக்குகள் பெற்றது. தற்போது திமுக சுமார் 2.6 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது.
இதையும் படிக்க:
சூடுபிடிக்கும் அதிமுக-பாஜக கூட்டணி விவகாரம்.. தமிழிசைக்கு ஆதரவு… அண்ணாமலைக்கு எதிர்ப்பு..
சட்டமன்ற தொகுதி வாரியாக கட்சிகள் பெற்ற வாக்குகளை உற்று கவனித்தால், அதிமுகவின் வாக்குகள் பாஜகவுக்கு செல்லாமல் திமுகவிற்கு சென்றிருப்பதை அறியலாம்.
உதாரணமாக, கோவை தெற்கு தொகுதியில் 2014 ஆம் ஆண்டு 47 ஆயிரத்து 591 ஆக இருந்த அதிமுக வாக்குகள், தற்போது 19 ஆயிரத்து 44 ஆக குறைந்துள்ளது. பாஜகவின் வாக்குகள் 48 ஆயிரத்து 930 லிருந்து 53 ஆயிரத்து 579 ஆக அதிகரித்துள்ளது. ஆனால், திமுக கூட்டணிக்கு சுமார் 20 ஆயிரம் வாக்குகள் அதிகரித்துள்ளன. மற்ற சட்டசபை தொகுதிகளிலும் இதே நிலைதான் .
இதே போன்று, சிங்கா நல்லூர், கோவை வடக்கு, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பிற சட்டசபை தொகுதிகளிலும் அதிமுக வாக்குகள் திமுக பக்கம் சாய்ந்திருப்பதை காணமுடிகிறது.
பாஜக வெற்றியை விரும்பாதவர்கள் திமுகவுக்கு வாக்களித்திருக்கலாம் என்பதே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. 2014 ஆம் ஆண்டு சிறுபான்மையினரின் வாக்கு வங்கி அதிமுகவுக்கு பலமாக இருந்தது என்றும் ஆனால் இம்முறை பாஜகவில் இருந்து பிரிந்தாலும் அனைவரும் திமுகவுக்கு வாக்களித்திருப்பதை காணமுடிவதாகவும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. அதே வேளையில், திமுக மற்றும் அதிமுகவின் கிராமப்புற வாக்கு வங்கியை பாஜகவால் உடைக்க முடியவில்லை. பல்லடம், சூலூர் ஆகியவற்றில் அவை பிரதிபலிக்கவில்லை என்பதை தரவுகள் காட்டுகின்றன.
.