தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, கடந்த சில நாள்களுக்கு முன்னர் புதுக்கோட்டையில் கம்பன் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், கருணாநிதி, ஸ்டாலினுக்கு முன்னால் திராவிட மாடல் ஆட்சியை முன்னெடுத்துச் சென்றவர், சமூகநீதியின் காவலர் ராமர் என்றும், வாய்ப்பு கிடைத்தால் அயோத்திக்கு செல்வேன் என்றும் கூறியிருந்தார். அமைச்சரின் இத்தகைய பேச்சை பலரும் விமர்சித்தனர்.
இந்த நிலையில், `திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடி ராமன்” என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திருவாய் மலர்ந்திருப்பது வியப்பளிப்பதாக விமர்சித்திருக்கும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இதில் தி.மு.க மூத்த தலைவர்கள் மௌனமாக இருப்பது ஏன் எனக் கேள்வியெழுப்பியிருக்கிறார்.
இது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் சீமான், “இத்தனை காலமும் திராவிட ஆட்சி என்பது பெரியார் ஈ.வே.ராமசாமி வழிவந்தவர்கள் நடத்தும் ஆட்சி என அனைவரும் நம்பிக்கொண்டிருக்க, இல்லை ‘நாங்கள் பகுத்தறிவு பகலவன் ராமசாமி வழிவந்தவர்கள் அல்ல. பகவான் ராமர் சாமியின் வழிவந்தவர்கள்’ என்று தி.மு.க அரசின் மிக முக்கிய அமைச்சக பொறுப்பை வகிக்கும் அமைச்சரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.