தமிழக பாஜக-வின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநிலத் தலைவர் சாய் சுரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக பா.ஜ.க-வில் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச் செயலாளரான திருச்சி சூர்யா அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாலும் மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி, கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் திருச்சிச் சூர்யாவை நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியினர் யாரும் அவருடன் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், “ஆதாரங்களின்றி கட்சி நிர்வாகிகள் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருவதாகக் கூறி கட்சியின் சிந்தனையாளர் பிரிவின் மாநில செயலாளர் கல்யாணராமனும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஓராண்டுக்கு தற்காலிகமாக நீக்கப்படுகிறார். அவருடன் கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது” என மாநில அலுவலக செயலாளர் சந்திரன் அறிவித்துள்ளார்.
இதற்கு எதிர்வினையாற்றியிருக்கும் திருச்சி சூர்யா, “அண்ணன் அண்ணாமலை அவர்களால் ஈர்க்கப்பட்டுதான் நான் தமிழ்நாட்டு பாஜக-வில் இணைந்தேன். என் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என் தலைவனை பேசியதற்கு நான் பதில் அளித்தேன், அதற்காக என்மேல் நடவடிக்கை என்றால் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன். எந்த நிலையிலும் அண்ணன் அண்ணாமலையின் குடும்பத்தில் ஒருவனாகவே இருப்பேன். இனியும் தமிழ்நாடு பாஜக-வில் பயணிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. சுயமரியாதை முக்கியம். எதன் பொருட்டும் அதை கைவிட முடியாது. என் மீது அன்பு கொண்டு எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் எனது அன்பான நன்றிகள்” என தெரிவித்துள்ளார்.
இதேபோல் கல்யாணராமன், “பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் என்ற தாய் அமைப்பின் அரசியல் உருவாக்கம். பா.ஜ.க என்பது வெறும் கட்சியல்ல, அது ஒரு சிந்தனையோட்டம், சித்தாந்தம், பாரத அன்னைக்கான சேவை. இன்று என்னை கட்சியை விட்டு நீக்கியுள்ளதாக தரப்பட்டுள்ள அறிவிக்கை துரதிர்ஷ்டவசமானது. மாநில தலைவர் அண்ணாமலை தி.மு.க-வுடன் ரகசிய உறவை உருவாக்கி அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியை முறித்ததாக சொல்லப்படுவதே எனது அடிப்படை குற்றச்சாட்டு. அது குறித்து அண்ணாமலையின் தலைமையின் கீழ் செயல்படும் நிர்வாகிகள் முடிவெடுக்க முடியாது என்பது அடிப்படை நீதி. It is against the principles of natural Justice. ஆங்கிலத்தில் “No one can be a judge in his own cause” என்று ஒரு பார்வை உண்டு. இந்த பார்வையை மீறுகிறோம் என்ற அடிப்படை விஷயம் கூட சம்பந்தப்பட்ட நபர்கள் அறியவில்லை என்பது பரிதாபம். இந்த அடிப்படை நீதியை மீறும் செயல் கண்டனத்திற்குரியது. இது குறித்து பா.ஜ.க மத்திய தலைமையிடம் எனது கருத்துக்களை பகிர்ந்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இந்த விவாகரத்துக்கு பின்னால் என்னதான் நடந்தது என்பதை அறிந்துகொள்வதற்காக பா.ஜ.க சீனியர்கள் சிலரிடம் பேசினோம். “திருச்சி சூர்யாவை பொறுத்தவரையில் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளர். ஏற்கெனவே டெய்சி விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அப்போது அண்ணாமலைக்கு ஆதரவான கருத்துக்களை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பேசி வந்தார். இதையடுத்து அவர் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். வழக்கம் போல அண்ணாமலைக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்தார். இந்த சூழலில்தான் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகரில் போட்டியிட பேராசிரியர் ராம சீனிவாசன் விருப்பம் தெரிவித்தார்.
ஆனால் அண்ணாமலை தரப்பு ராதிகா சரத்குமாருக்கு சிபாரிசு செய்தது. இதையடுத்து திருச்சிக்கு செல்ல ஆர்வம் காட்டினார் பேராசிரியர். அந்த நேரத்தில்தான் திருச்சி சூர்யா, “ராம சீனிவாசன் திருச்சியில் நின்றால் பா.ஜ.க டெபாசிட் கூட வாங்காது’ என ட்விட் தட்டிவிட்டார். இதையடுத்து மதுரைக்கு மாற்றப்பட்டார், ராம சீனிவாசன். இதில் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் கடுப்பாகிவிட்டார்கள். இந்த சூழலில்தான் தேர்தல் முடிவுகள் வெளியானது. பா.ஜ.க-வுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் தலைவர் தமிழிசை, “அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி இருந்திருந்தால், தி.மு.க-வுக்கு ஓர் இடத்தில்கூட வெற்றி இல்லாமல் போயிருக்கும். கூட்டணி வைக்கலாம் என்றுதான் நாங்களும் வியூகம் அமைத்தோம். ஆனால், சகோதரர் அண்ணாமலைக்கு அதில் விருப்பம் இல்லை” என்று தெரிவித்து இருந்தார்.
இந்த சூழலில்தான் திருச்சி சூர்யா, “உட்கட்சி விவகாரங்களை பொதுவெளியில் பேசக்கூடாது” என தமிழிசையை மறைமுகமாக விமர்சித்திருந்தார். அதற்கு, ‘நேற்று அரசியலுக்கு வந்தவர்களெல்லாம், மூத்த அரசியல் தலைவரான தமிழிசையை விமர்சிப்பதா..?’ என தமிழிசையின் ஆதரவாளர்கள் பதிலடி கொடுத்தனர். மேலும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் பலர் டெல்லிக்கு புகார்கள் அனுப்பினர். மறுப்பக்கம் அண்ணாமலை குறித்து அதிரடியான கருத்துக்களை கல்யாணராமன் தெரிவித்து இருந்தார். அதில், “பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, சி.பி.ஆர்., தமிழிசை, இல.கணேசன் போன்றோர் அண்ணாமலை தலைமையிலான வார் ரூம் குண்டர்களால் சிறுமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
கட்சியின் பணத்தைக்கொண்டு அண்ணாமலையை விளம்பரப்படுத்தவும், சொந்தக் கட்சித் தலைவர்களையே வசைபாடவும்தான் அண்ணாமலையின் வார் ரூம் செயல் பட்டுவருகிறது” என்றெல்லாம் பேசியிருந்தார். இதையடுத்து கல்யாணராமன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை தரப்பு புகார் அனுப்பியது.
இதையடுத்து தமிழிசை, அண்ணாமலை என இரண்டு தரப்பினையும் சமாதானம் செய்ய முடிவு செய்த டெல்லி இந்த நடவடிக்கையை எடுக்க அனுமதித்து இருக்கிறது. அதன்படிதான் இந்த நடவடிக்கை எதுக்கு முடிவு செய்யப்பட்டது. ஆனால் கல்யாணராமன் மீது நடவடிக்கை எடுக்க ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் தரப்பும், திருச்சி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க அண்ணாமலை தரப்பும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் ஒருவரத்துக்கு மேல் நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்த சூழலில்தான் டெல்லி உத்தரவின் பெயரில் தமிழிசையின் இல்லத்துக்கே சென்று சந்தித்து சமரசம் பேசினார், அண்ணாமலை.
இந்நிலைலியில் கடந்த 19.6.2024 ஆண்டு பா.ஜ.க மைய குழுகூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட தமிழிசை தரப்பு திருச்சி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இருக்கிறது. அதேபோல தருமபுர ஆதீனத்தை மிரட்டிய விவகாரத்தில் சிக்கிய மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரத்தையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதேபோல் அண்ணாமலை தரப்பு கல்யாணராமனை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இருக்கிறது. அதன்பிறகுதான் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது” என்கிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88