திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த தீர்த்தமலையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தீர்த்தகிரி ஈஸ்வரர் ஆலயம் உள்ளது. சாதாரண நாள்களில் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விசேஷ தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் இங்கு வந்து செல்வது வழக்கம். திருமணம் போன்ற சுப காரியங்களும், ஈமச்சடங்குகள் முடித்த பிறகு குளத்தில் நீராடவும், தினசரி பலர் வந்து போய்க் கொண்டிருக்கின்றனர். இத்தகைய சூழலில், இந்தக் கோயிலில் பக்தர்கள் நீராடும் குளம் மிகவும் அசுத்தமான நிலையில், துர்நாற்றம் வீசும் அளவுக்கு, மாசடைந்து காணப்படுகிறது.
குளம் மற்றும் கோயிலைச் சுற்றிலும் ஏராளமான அழுக்கு துணிகளும், உணவு அருந்திவிட்டு வீசப்பட்ட குப்பைகளும் நிறைந்து காணப்படுகின்றன.
கோயிலுக்கு வரும் பக்தர்கள், இங்கு நிலவும் சுகாதாரச் சீர்கேட்டால் முகம்சுளிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். எனவே, கோயிலையும், குளத்தையும் உடனடியாகச் சுத்தம் செய்து, நல்ல முறையில் பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.