திருப்பத்தூர் டு சேலம் நான்கவழிச் சாலை கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த நெடுஞ்சாலையில் நடுநடுவே வரிசையாக முக்கிய பகுதிகளில் மின் விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டது. இதில், ஜோலார்பேட்டை பகுதியில் இவ்வாறு அமைக்கப்பட்ட மின் விளக்கு கம்பங்களில் ஒன்று சேதமடைந்தது விழும் தருவாயில் உள்ளது.
இது, அந்த வழியே செல்லும் மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் நம் மீது விழுந்துவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதுடன், ஆபத்தாகவும் மாறியிருக்கிறது. இது குறித்து அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் விசாரித்தபோது புதிதாக மின் விளக்கு கம்பம் அமைத்த சில நாள்களிலேயே இவ்வாறு சேதமடைந்ததாகவும், குறிப்பாக காற்று வேகமாக அடித்ததால் அதிக எடை தாங்க முடியாமல் கம்பம் தற்போது விழும் நிலைக்கு சேதமடைந்திருப்பதாகவும் கூறினர்.
மேலும், இந்த மின் விளக்கு கம்பத்தை மாற்றும்படி அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் அவர்கள் கண்டுகொள்ளவில்லையென்றும், எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இறுதியாக, இந்த மின் விளக்கு கம்பம் விழுந்து விபத்து ஏற்படுவதற்கு முன்பு அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.