`தீ' அணைக்கும் பணி: `11 நாள்கள் டீ, காபி செலவு ரூ.27 லட்சம்' – என்ன சொல்கிறது கோவை மாநகராட்சி!

-கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. கோவை மேயர் பதவிக்கு ஆகஸ்ட் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தக் கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. ஆனால் ஏராளமான சர்ச்சைகளுடன் கூட்டம் நடந்து முடிந்துள்ளது.

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம்

மேயர் பதவிக்கு முயற்சி செய்யும் மண்டலத் தலைவர்கள் இளஞ்செல்வி, மீனா, தெய்வானை ஆகியோர் அதிகம் ஸ்கோர் செய்ய முயற்சித்தனர். இதனிடையே மாமன்ற அதிமுக தலைவர் பிரபாகரன் பல்வேறு பிரச்னைகளை கிளப்பி திமுக-வினரை கடுப்பாக்கினார்.

ஒருகட்டத்தில் துணை மேயர் வெற்றிசெல்வனை கைக்காட்டி, “துணை மேயர் நீங்க ஜெயிலுக்கு போவீங்க.” என்று ஓப்பனாக பேசினார். தெருநாய் பிரச்னை குறித்து திமுக, அதிமுக-வினரிடையே கடுமையான விவாதம் நடந்தது.

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம்

“திமுக ஆட்சியில் தான் நாய்கள் அதிகம் கடிக்கின்றன.” என அதிமுக-வும், “கடந்த ஆட்சியில் நீங்கள் செய்த தவறால் தான் நாய்கள் அதிகம் கடிக்கின்றன.” என திமுக-வினரும் காரசாரமாக விவாதித்தனர். முக்கியமாக வெள்ளலூர் குப்பைக் கிடங்கு குறித்த விவகாரமும் பூதாகரமாக வெடித்தது.

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கடந்த ஏப்ரல் மாதம் சுமார் 11 நாள்களுக்கு ஏற்பட்ட தீ விபத்தை அணைக்க ஏற்பட்ட செலவினங்கள்  மாமன்ற ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. தீயைக் கட்டுப்படுத்துவதற்காக விமானப் படையில் இருந்தும்,

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு

தீயணைப்பு வாகனங்கள், 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், மாநகராட்சி ஊழியர்கள் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், காவல் துறை, மருத்துவக் குழு, அலுவலர்களும் இப்பணியில் ஈடுபட்டனர்.

தீயணைப்பு பணியில் ஈடுபட்ட அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கு சாப்பாடு, டீ, காபி உள்ளிட்டவை மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டன. அந்த வகையில், உணவு, டீ, காபி, குளிர்பானங்கள், பழங்கள் ஆகியவற்றுக்கு மட்டும்  27,51,678 ரூபாய் கணக்கு காட்டப்பட்டுள்ளது.

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு டீ செலவு

மேலும், டீசல் பெட்ரோல், கீரிஸ் ஆயில் 18,29,731 ரூபாயும், காலணிகள் 52,348 ரூபாயும், முகக்கவசம் 1,82,900 ரூபாயும், பொக்லைன், லாரி வாடகை 23,48,661  ரூபாயும், தண்ணீர் டேங்கர் லாரி வாடகை (பேரூராட்சி, தனியார் வாகனம்) 5,05,000 ரூபாயும் செலவிடப்பட்டுள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், கோவை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், “சுமார் 50 ஏக்கர் பரப்பளவுக்கு குப்பைகள் எரிய தொடங்கின. இதை அணைக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 13 தீயணைப்பு வாகனங்களும், சராசரியாக ஒரு வண்டிக்கு 14 பேரும் பணிபுரிந்தனர். தீயணைப்பு வாகனங்களுக்கு தண்ணீர் வழங்க ஒவ்வொரு நாளும் 23-42 தண்ணீர் லாரிகள் பயன்படுத்தப்பட்டன.

கோவை மாநகராட்சி

12 நாள்கள் சுழற்சி முறையில் 24 மணிநேரமும் காவல்துறை, மாநகராட்சி ஊழியர்கள், அதிகாரிகள், தீயணைப்பு, மருத்துவக்குழு உள்பட 600 பேர் பணியாற்றினர். அவர்களுக்கு 3 வேளை தரமான உணவும், வெயில் காலம் என்பதால் மோர், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருள்களும் வழங்கப்பட்டன.” என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *