”வயநாடு மழை வெள்ள பாதிப்பை ஒன்றிய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க தயாராக இல்லை.. காரணம் அவர்களே தேசிய பேரிடராகத்தான் இருக்கிறார்கள்” என தூத்துக்குடியில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி நேற்று செய்தியாளர்களிடம் கூறினார். இந்த நிலையில், ஆர்.இ.சி லிமிடெட் சமூக பொறுப்பு நிதியில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆர்.இ.சி லிமிடெட் இயக்குநரும், பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவருமான நாராயணன் திருப்பதி, தூத்துக்குடிக்கு வருகை தந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் கனிமொழியின் கருத்து குறித்து கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதற்கு பதிலளித்த அவர், “ ’தேசியப் பேரிடர்’ என அறிவிப்பது என்றால் என்ன என்பதை முதலில் அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு சில விதிகள், சட்டங்கள் இருக்கின்றது. சுனாமி காலத்தில்கூட தேசியப் பேரிடராக சுனாமி பாதிப்பு அறிவிக்கப்படவில்லை. ஆனால், அதற்கு நிகராக வயநாடு சம்பவம் ஒரு பேரிடராக ஏற்றுக்கொள்ளப்பட்டு உடனடியாக மத்திய அரசு தேசிய நிவாரணப் படகுகளை அனுப்பி இருக்கிறது. ராணுவம் விரைந்து இருக்கின்றது.
உரிய நிவாரண உதவிகள் அனைத்தையும் செய்வதாக பிரதமர் வாக்குறுதி அளித்திருக்கிறார். பாராளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டு உள்ளது. அமைச்சர் சிவசங்கர் கடவுள் ராமரை பற்றி பேசி, மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். தொடர்ந்து, ராமர் பிறந்த இடத்தில் அதே இடத்தில் ராமருக்கு கோவில் கட்டப்பட்டிருக்கிறது. கடந்த வாரம் தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி சொன்னார், ’ராமர் ஆட்சி திராவிட மாடல் ஆட்சி’ என்று. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு அமைச்சர்கள் மாற்றி, மாற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அமைச்சர் சிவசங்கர் ராமர் ஆட்சி மாய ஆட்சி என்று சொல்லி இருக்கிறார். ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் எல்லாரையும் கொண்டு வந்து கல்வெட்டு வைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ராஜேந்திர சோழன் உட்பட சோழ சாம்ராஜ்யமே பகுத்தறிவால் உருவானது அல்ல, பகுத்தறிவால் வாழ்ந்தது அல்ல, சோழ சாம்ராஜ்யம் என்பது முழுக்க முழுக்க இந்த நம்பிக்கைகள். இந்து கடவுள்கள் இந்து கோவில்களை எழுப்பிய ஓர் பேரரசு அது என்பதுகூட தெரியாமல் பேசி கொண்டு வருகிறார்.
இந்த நாட்டு மக்களின் நெஞ்சம் நிறைந்த ராமபிரானை தொடர்ந்து இழிவுபடுத்தி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உதயநிதி ஸ்டாலின், இந்து தர்மத்தை அழிக்க வேண்டும் என்று பேசினார். தொடர்ந்து எதையாவது பேசி தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய சட்டம், ஒழுங்கு சீரழிவதை மடை மாற்றுகின்றனர். அமைச்சராக இருக்கக்கூடியவர்கள் உறுதியான நிர்வாகத்தை கவனிக்க வேண்டும்.. தமிழ்நாட்டில் தினம் தோறும் கூலிப்படையினரால் மக்கள் படுகொலை செய்யப்படுவது தொடர் கதையாகி உள்ளது.
அதை கவனிக்க அரசு நிர்வாகம் சரியான முறையில் செயல்படவில்லை. சட்டம் ஒழுங்கை காப்பாற்ற தவறிவிட்ட இந்த அரசு இனி இருந்து பிரயோஜனம் இல்லை. அதனால் இந்த அரசு தார்மீக கடமையை, உரிமையை இழந்துவிட்டது. தூத்துக்குடியை பொறுத்த அளவில் மத்திய அரசாங்கம் துறைமுகம், சாலை வசதி, விமான நிலையம் போன்ற எத்தனையோ பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை செலவு செய்தும்கூட இங்க இருக்கக்கூடிய திராவிட மாடல், தமிழக அரசு தொழில் ரீதியான முன்னேற்றங்களை, முதலீடுகளை கொண்டு வருவதற்கு தயாரில்லை.” என்றார்.