2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களை நிச்சயம் வெல்லும் என்று ஆக்சிஸ் மை இந்தியா (Axis My India) கருத்துக்கணிப்பு வெளியிட்டது. இந்த நிறுவனம் மட்டுமன்றி நாடாளுமன்றத் தேர்தல் குறித்து இந்தியா டுடே, ரிபப்ளிக் டிவி போன்ற பல்வேறு வட இந்திய ஊடகங்கள், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 350-400 தொகுதிகள் வரை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கும் என்று கருத்துக்கணிப்புகளை வெளியிட்டன.
ஆனால், தேர்தல் முடிவுகள் இதற்கு அப்படியே நேர்மாறாய் வந்ததோடு, கருத்துக்கணிப்புகளும் பொய்த்துப்போனது. பா.ஜ.க கூட்டணியால் 300 இடங்களைக்கூட தொடமுடியவில்லை, 294 இடங்களை மட்டுமே வென்றது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைத்த பா.ஜ.க இந்த தேர்தலில் வெறும் 232 இடங்களை மட்டுமே பெற்று தனிப்பெரும்பான்மையை இழந்தது. அதோடு, தேர்தல் முடிவுகள் வெளியான அன்று, இந்தியா டுடே செய்தி தொலைக்காட்சி நடத்திய தேர்தல் முடிவுகள் பற்றிய விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த “ஆக்சிஸ் மை இந்தியா’ நிர்வாக இயக்குநர் பிரதீப் குப்தாவிடம், கருத்துக்கணிப்பு பொய்த்துப்போனதை நெறியாளர் ராஜ்தீப் சர்தேசாய் சுட்டிக்காட்ட, விவாதத்துக்கு இடையிலேயே அவர் கண்ணீர்விட்டு அழுதார். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் அதிக அளவில் வைரலானது.