நடைப்பயணம்; ராகுல் வருகை; நிர்வாகிகள் மாற்றம்? – தமிழகத்தில் காங்கிரஸ் 'கை' ஓங்குமா?!

தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 10 இடங்களைக் காங்கிரஸ் பெறுவதிலும் தி.மு.க முக்கிய பங்காற்றியது. ஆனால் சமீபகாலமாக அக்கட்சித் தலைவர்களின் பேச்சு தனித்துக் களமாடுவதை நோக்கியே இருக்கிறது. குறிப்பாக மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, “எத்தனை காலம்தான் பிறரைச் சார்ந்திருக்கப் போகிறோம். தமிழகத்தில் காமராஜர் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும்” எனப் பேசி வருகிறார். இதேபோல், “வரும் 2026-ம் ஆண்டு அமையும் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற வேண்டும்” சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் பேசியிருக்கிறார். இதையடுத்து கட்சியைப் பலப்படுத்தும் வகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை அழைத்துவந்து நடைப்பயணம் மேற்கொள்வதற்கும், நிர்வாகிகளை மாற்றம் செய்வதற்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஆகவே இத்தகைய செயல்கள் மூலமாக மட்டுமே தமிழகத்தில் காங்கிரசின் கை ஓங்குமா?

கார்த்தி சிதம்பரம் – காங்கிரஸ்

இதுகுறித்து நம்மிடம் பேசிய சீனியர் கதர்கள், “தமிழகத்தில் கடந்த 1962-ம் ஆண்டு வரையில் காங்கிரஸ்தான் கோலோச்சி வந்தது. அப்போது முதல்வராக இருந்த காமராஜர் பதவி விலகினார், பக்தவத்சலத்துக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அந்த நேரத்தில்தான் இந்தியை ஒரே ஆட்சி மொழியாக்கும் வேலையை மத்திய அரசு செய்தது. அதை தி.மு.க கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, 1965-ம் ஆண்டு மாபெரும் போராட்டங்களை  முன்னெடுத்தது. முன்னதாக தமிழகத்தில் அரிசிக்கு பெரும் தட்டுப்பாடு நிலவியது. இதுவும் தி.மு.க-வுக்கு வலு சேர்த்தது. தமிழக மக்களின் மனநிலையை அறிந்துகொள்ளாமல் டெல்லியின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப மொழிப் போராட்டங்களை பக்தவத்சலம் கையாளத் தொடங்கினார்.இதனால் தமிழக மக்கள் கொதித்துப் போனார்கள்.

இந்திரா – காமராஜர் – மொரார்ஜி

பிறகு 1967-ம் ஆண்டு சென்னை மாகாணத்திற்கான சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலும் ஒருசேர நடத்தப்பட்டது. இதில், காங்கிரஸ், திராவிடர் கழகம் ஓரணியாகவும், தி.மு.க தலைமையிலான ஐக்கிய முன்னணியும் ஓரணியாகவும் தேர்தலைச் சந்தித்தன. முடிவில் தி.மு.க 174 இடங்களில் போட்டியிட்டு 137 இடங்களைக் கைப்பற்றியது. ஆனால் காங்கிரஸ் 232 இடங்களில் போட்டியிட்டு 51 தொகுதிகளை மட்டுமே பெற முடிந்தது. இதேபோல் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க 25 இடங்களைக் கைப்பற்றிய நிலையில், 3 இடங்களை மட்டுமே காங்கிரஸ் பெற முடிந்தது. இதற்குள் அகில இந்தியத் தலைமையிலும் குழப்ப மேகங்கள் சூழ்ந்தன. பிரச்னை மேலும் கூர்மையடையவே இந்திராவை, கட்சியை விட்டு காமராஜர், மொரார்ஜி தேசாய் தலைமையிலானவர்கள் நீக்கினார்கள்.

கருணாநிதி

இதையடுத்து 1971-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. அப்போது கருணாநிதி சட்டமன்றத்தைக் கலைக்கவே மீண்டும் இரண்டு தேர்தல்களும் ஒன்றாகவே நடந்தன. இதில் தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தது, இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ். மறுபக்கம் காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் தனித்துக் களமாடியது. அப்போது இந்திரா காந்தி ஒரு தவறான முடிவையும் எடுத்திருந்தார். அதாவது சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியும் இல்லை என்கிற உடன்பாட்டின் அடிப்படையில் இந்திரா காங்கிரசுக்கு 9 நாடாளுமன்றத் தொகுதிகளை தி.மு.க ஒதுக்க முன்வந்தது. இதற்கு இந்திராவும் சம்மதம் தெரிவித்தார். முடிவில் தி.மு.க கூட்டணி அதிரிபுதிரி வெற்றி கண்டது. ஆனால் அந்த இடத்திலிருந்து தமிழகத்தில் காங்கிரஸின் கை சுருங்கிப்போனது. இன்று வரையில் அந்த பலத்தைப் பெறுவதற்கு எந்த தலைவரும் முயற்சி எடுக்கவில்லை. எனவே அடிப்படை கட்டமைப்புகளைச் சீரமைக்க வேண்டும்” என்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் பேசுகையில், “காமராஜரின் ஆளுமையின் கீழ் 1967-ம் ஆண்டு வரையில் காங்கிரஸ் பலமாக இருந்தது. பிறகு தலைவராக வந்த பக்தவத்சலத்துக்கு அரசியலில் ஆளுமை செலுத்தத் தெரியவில்லை. 1989-ம் ஆண்டு ‘காமராஜர் ஆட்சியைக் கொடுப்போம்’ என்றார் மூப்பனார். 20 முறைக்கு மேல் தமிழகத்திற்கு ராஜீவ், சோனியா வந்தார்கள். ஆனாலும் வெற்றி கிட்டவில்லை. பிறகு வாழப்பாடி ராமமூர்த்தி கூட ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்து பார்த்தார். ஆனாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. இந்தச்சூழலில்தான் பெருந்தகை, கார்த்தி இப்படிப் பேசி வருகிறார்கள். ராகுல் காந்தியை அழைத்துவந்தாலும், அவர் தி.மு.க தலைவர்களைச் சென்றுதான் பார்ப்பார். அதேபோல் புதிய நிர்வாகிகளாகத் தனது ஆதரவாளர்களைத்தான் பதவிக்குக் கொண்டுவருவார். இப்படி இருக்கும் சூழலில் தனித்து நிற்போம் தன்மானம் காப்போம் என்றால் டெபாசிட் இழப்பார்கள். எனவே முதலில் கிராமங்கள் தோறும் பூத் கமிட்டிகளை வலுப்படுத்த வேண்டும்” என்றார்.

தராசு ஷியாம், ப்ரியன்

தொடர்ந்து பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், “தமிழகத்தில் காங்கிரஸ் பலம் குறைந்துதான் காணப்படுகிறது. 18 எம்.எல்.ஏ-க்கள், 10 எம்.பி-க்கள் இருப்பதற்குக் காரணம் கூட்டணிதான். பா.ஜ.க-வை எதிர்க்கும் திமுக, கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் காங்கிரஸ் இணைந்திருப்பதால் காங்கிரஸ் பொலிவுடன் இருக்கிறது. ஆனால் தனியாகக் களமாடினார்கள் என்றால் காங்கிரசின் வாக்கு வங்கி 5 – 6% அளவுக்குத்தான் இருக்கும். பா.ஜ.க-வுக்கு எதிர்ப்பு அலை மிக அதிகமாகத் தமிழகத்தில் இருக்கிறது. தேர்தல் நேரத்தில் 8 முறை தமிழகத்திற்குப் பிரதமர் மோடி வந்தார். மூன்று நாட்கள் விவேகானந்தர் பாறையில் தங்கி இருந்தார். ஆனாலும் தமிழக மக்கள் ஒரு இடத்தை கூட கொடுக்கவில்லை. இதைப் பயன்படுத்தி கட்சியை வளர்க்க வேண்டும்.

கூட்டணிக் கட்சிகளை ஆரோக்கியமாக விமர்சிக்க வேண்டும். தமிழக பிரச்சினைகளை அரசியல் கட்சியாக அணுக வேண்டும். வட்டார, நகர, மாவட்ட அளவில் இருக்கும் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுக்க வேண்டும். முதலில் இளைஞர்களை ஈர்க்கும் அளவுக்கான வேலைகளைச் செய்ய வேண்டும். இளைஞர்கள் தி.மு.க, அ.தி.மு.க இல்லாமல் நாம் தமிழர், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், ஏன் பா.ஜ.க-வில் கூட இணைகிறார்கள். இதற்கு புதிய பொறுப்புகள், அதிகாரங்கள் கிடைக்கும் என்பதுதான். எனவே இதற்கு ஏற்ற வகையில் சிந்தித்து இளைஞர்களைக் கவர வேண்டும். ராகுல்காந்தியின் நடைப்பயணத்தில் இளைஞர்கள் அதிகமாகப் பங்கெடுத்தார்கள். கட்சியிலும் இணைந்தார்கள். அந்த சூட்டில் தமிழகத்திலும் இளைஞர்களை இணைந்திருக்க வேண்டும். ஆனால் தலைமை செய்யத் தவறி விட்டது” என்றார்.

குபேந்திரன்

பெருந்தகையின் ஆதரவாளர்கள், “தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும் எனத் தலைவர் மேடையில் மட்டும் பேசவில்லை. அதற்கான வேலையும் தொடங்கிவிட்டார். கட்டமைப்பைப் பலப்படுத்தும் விதமாக முதலில் நிர்வாகிகளை மாற்றம் செய்யத் திட்டம் வகுத்திருக்கிறார். அதன்படி மாவட்டங்களின் எண்ணிக்கையை 75-ல் இருந்து 117 ஆக உயர்த்தப்படுகிறது. இதையடுத்து வரும் அக்.2-ம் தேதி ஸ்ரீ பெரும்புத்தூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்திலிருந்து நடைப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டிருக்கிறது. கோவை, நாகை, குமரியிலிருந்தும் நடைப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இறுதியாகத் திருச்சியில் நிறைவு செய்து, அங்குப் பொதுக்கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பங்கேற்கிறார். ஆகவே தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்” என்றனர் நம்பிக்கையாக.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் இனியன் ராபர்ட்டிடம் பேசினோம், “தமிழக காங்கிரஸ் கட்சியில் தொய்வு இருக்கிறது எனச் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. மோடி ஆட்சியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியால் ஏராளமான இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகிறார்கள். மேலும் தலைவர் செல்வப்பெருந்தகை மாவட்டம் தோறும் செயற்குழு கூட்டம் நடத்தி கட்சியைப் பலப்படுத்தி வருகிறார். மேலும் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் வரும் வரும் அக்.2-ம் தேதி நடைப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம்.

இனியன் ராபர்ட்

இதில் ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. சிவகங்கை, கன்னியாகுமரி போன்ற இடங்களில் பூத் கமிட்டி சிறப்பாக இருக்கிறது. சில இடங்களில்தான் நீங்கள் சொல்வது போலப் பிரச்சினை இருக்கிறது. அதை நவம்பர் மாதத்திற்குள் சரி செய்து விடுவோம். காங்கிரஸ் அடிப்படையில் மக்கள் இயக்கம். கட்சி நிகழ்ச்சிகளில் அவர்கள் கலந்து கொள்ளவில்லை என்றாலும் சித்தாந்தத்தைப் பெரிதும் விரும்புவார்கள். அவர்கள்தான் எங்களின் பலமாக இருக்கிறார்கள். விரைவில் அவர்களையும் கட்சியின் பக்கம் முழுவதும் கொண்டுவருவோம்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *