சர்ச்சையில் காஞ்சிபுரம் மேயர்!
புதிதாகத் தரம் உயர்த்தப்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு, 2022-ம் ஆண்டில் தேர்தல் நடந்து முடிந்தது. மொத்தமுள்ள 51 இடங்களில், திமுக 33 இடங்களிலும், காங்கிரஸ் ஓர் இடத்திலும், அதிமுக ஒன்பது இடங்களிலும், பாமக இரண்டு, பாஜக ஓர் இடத்திலும் வெற்றிபெற்றிருந்தன. மேயர் பதவி மகளிருக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் திமுக தலைமை, மகாலட்சுமி யுவராஜை வேட்பாளராக அறிவித்தது. கட்சித் தலைமை அறிவித்ததைத் தாண்டி, திமுக-வைச் சேர்ந்த சூர்யா என்பவரும் மேயர் தேர்தலில் போட்டியிட்டார்.
இருந்தபோதிலும், நடந்து முடிந்த மேயர் தேர்தலில் கூடுதல் வாக்குகளைப் பெற்று மகாலட்சுமி மேயராக வெற்றிபெற்றிருந்தார். மேயர் தேர்தல் தொடங்கி, காஞ்சிபுரம் மாநகராட்சியில் சர்ச்சைகள் நிறைந்தே காணப்படுகின்றன. மாநகராட்சி ஆணையருக்கு எதிராகப் பல்வேறு பிரச்னைகள் எழுந்த நிலையில், ஆணையரும் மாற்றப்பட்டார். மீண்டும் புதிதாக வந்த ஆணையரும் ஒரு தரப்பினருக்கு மட்டுமே சாதகமாகச் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
கவுன்சிலர்கள் போர்க்கொடி!
இந்தச் சூழலில், `மேயர் மகாலட்சுமியின் கணவர் யுவராஜின் தலையீடு மாநகராட்சியில் அதிகமாக இருக்கிறது. மேயரும் ஒரு சாராருக்கு மட்டுமே ஆதரவாகச் செயல்படுகிறார். இதனால் எங்களால் வார்டு பணியைச் செய்ய முடியவில்லை’ என்று திமுக கவுன்சிலர்களே போர்க்கொடி தூக்கினர். அதோடு, அதிமுக, பாஜக, பாமக, திமுக உட்பட 30 கவுன்சிலர்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மேயர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று மனு கொடுத்தார்கள். விஷயம் கைமீறிப்போவதை அறிந்த மாவட்டச் செயலாளர் சுந்தர், அதிருப்தி கவுன்சிலர்களை அழைத்து சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில்தான் முடிந்தது.
அடுத்ததாக துறை அமைச்சர் கே.என்.நேரு கவுன்சிலர்களை அழைத்துப் பேசி சமரசம் செய்து அனுப்பிவைத்தார். `சரி’ என்று சொல்லிவிட்டுச் சென்றாலும், மீண்டும் மேயரை மாற்ற வேண்டும் என்று மாவட்டச் செயலாளரிடம் கவுன்சிலர்கள் 20 பேர் மனு கொடுத்தது நிலைமையை இன்னும் மோசமாகியது. இதைத் தொடர்ந்து கவுன்சிலர்கள் பத்துப் பேர் தங்களுக்கு வழங்கப்பட்ட நிலைக்குழு உறுப்பினர்கள் பதவியையும் ராஜினாமா செய்வதாக ஆணையரிடம் கடிதம் வழங்கினர். தொடர்ந்து பொறுப்பு அமைச்சர் தா.மோ.அன்பரசன் அழைத்துப் பேசியும், கவுன்சிலர்கள் யாரும் சமாதானமாவதாகத் தெரியவில்லை. அனைவருமே என்ன நடக்கிறது என்பது குறித்து கட்சித் தலைமைக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள்.
நம்பிக்கையில்லாத் தீர்மானம்!
இந்த நிலையில், இந்த மாதம் 29-ம் தேதி மேயர்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று கவுன்சிலர்கள் அனைவருக்கும் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் கடிதம் அனுப்பியிருந்தார். மொத்தம் 51 கவுன்சிலர்கள் இருக்கும் நிலையில், தீர்மானத்தை நிறைவேற்ற ஐந்தில் நான்கு பங்கு உறுப்பினர்கள் அதாவது 41 பேர் வாக்களிக்க வேண்டும். அதேபோல தீர்மானத்தை நிராகரிக்கவும் ஐந்தில் ஒரு பங்குக்கும் அதிகமானோர் வாக்களிக்க வேண்டும். 13-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் மேயருக்கு ஆதரவாகவும். 33-க்கும் அதிகமானோர் மேயருக்கு எதிராகவும் இருந்தார்கள்.
நேற்று (29-ம் தேதி) வாக்கெடுப்பு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பாக எதிராக இருந்த கவுன்சிலர்கள், ஆதரவு கவுன்சிலர்கள் குடும்பத்துடன் தனிப் பேருந்து மூலம் ஈ.சி.ஆரிலுள்ள சொகுசு விடுதிக்குச் சென்றுவிட்டனர். இதனால் எதிர்ப்பு நிலையிலிருந்த கவுன்சிலர்கள் யாரும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ள மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே வாக்கெடுப்பில் கவுன்சிலர்கள் யாருமே கலந்துகொள்ளவில்லை. யாரும் வராததால், வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்ததாக மாநகராட்சி ஆணையர் அறிவித்தார். இதனால் காஞ்சிபுரம் மேயராக மகாலட்சுமியே தொடர்வார்.
பின்னணியில் என்ன நடந்தது?
கவுன்சிலர்கள் யாரும் கலந்துகொள்ளாதது ஏன் என்பது குறித்து காஞ்சிபுரம் திமுக-வினர் சிலரிடம் பேசினோம். “பிரச்னை ஆரம்பித்தது முதலே கவுன்சிலர்களைச் சமாதானப்படுத்தும் முயற்சி தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருந்தது. மாவட்டச் செயலாளர் சுந்தர், துறை அமைச்சர் கே.என்.நேரு, பொறுப்பு அமைச்சர் தா.மோ.அன்பரசன் என அனைவருமே பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திவிட்டார்கள். இருந்தபோதிலும் மேயரை மாற்றியே தீர வேண்டும் என்பதில் எதிர்ப்பு கவுன்சிலர்கள் மிகவும் உறுதியாக இருந்தனர். தலைமை அழைத்துப் பேசியும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர மனு அளிக்கப்பட்டிருந்தது. நெல்லை, கோவையைப்போல காஞ்சி மேயரை மாற்றும் எண்ணத்தில் கட்சித் தலைமை இல்லை. இதனால், எதிராக இருக்கும் திமுக கவுன்சிலர்ளிடம் பேசி, சமரசம் செய்ய முடிவுசெய்தது.
கட்சித் தலைமை அழைத்துப் பேசியிருந்த நிலையில், திமுக இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை கடந்த சில தினங்களுக்கு முன்பாக காஞ்சிபுரத்துக்குச் சென்றிருந்தார். அங்கே எதிர்ப்பு தெரிவித்த கவுன்சிலர்களை அழைத்து, சமாதானம் பேசியிருக்கிறார். அதே சமயத்தில் யுவராஜ், இளைஞரணியில் இருப்பதால் உதயநிதி தரப்பும் மாவட்டச் செயலாளர் சுந்தரை அழைத்துப் பேசியிருக்கிறது. இவையெல்லாம் ஒருபுறமிருக்க, தீர்மானம் நிறைவேற 41 கவுன்சிலர்கள் வாக்களிக்க வேண்டும், தற்போதைய நிலையில் 33 பேர் மட்டுமே எதிர்ப்பாக இருக்கும் நிலையில் அனைவரும் வாக்களித்தால் தீர்மானம் நிறைவேறாது. கட்சியைப் பகைத்துக்கொண்டு நிறைவேறாத தீர்மானத்தில் எதற்காகக் கலந்துகொள்ள வேண்டும் என்று கவுன்சிலர்கள் பேசியிருக்கிறார்கள். எனவேதான் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் அனைவருமே தவிர்த்துவிட்டார்கள்” என்றார்கள் விரிவாக.
இப்போதைக்கு வாக்கெடுப்பு தோல்வியில் முடிவடைந்திருந்தாலும், காஞ்சிபுரம் விவகாரம் நீறுபூத்த நெருப்பாக இருக்கிறது என்பதே உண்மை கள நிலவரம்..!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88