சமீகாலமாக செல்லூர் ராஜூ பேசுவதெல்லாம் சர்ச்சையாகி வரும் நிலையில் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தவர், “மூன்று முறை என்னை மக்கள் வெற்றிபெற வைத்தனர். பத்தாண்டுகள் அமைச்சராக இருந்த நான் மதுரைக்கு எட்டாயிரம் கோடியில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தேன். இன்னும் ஐம்பதாண்டுகளுக்கு மதுரைக்கு குடிநீர் பிரச்னை ஏற்படாத வகையில் முல்லைப் பெரியாறிலிருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை தொடங்கி தற்போது அது நிறைவேற உள்ளது.
நாற்பது தொகுதியில் வெற்றியை கொடுத்த மக்களுக்கு பரிசாக மின்கட்டண உயர்வை மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ளார். அ.தி.மு.க ஆட்சியில் மின் கட்டண உயர்வு குறித்து ஆய்வு செய்ததற்கே ஏற்றாத மின்கட்டணத்துக்கு அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் கருப்பு சட்டை போட்டு குடும்பத்தினருடன் போராட்டம் நடத்தினார். இப்போது மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளார்.
மதுரையில் நடை பயிற்சி செல்லவே பயமாக உள்ளது. எங்க கட்சி கவுன்சிலரெல்லாம் நடை பயிற்சி போகிறவர்கள். (அருகிலிருந்த கவுன்சிலர்களை பார்த்து…) நீங்கள்ளாம் நடை பயிற்சி போகாதீங்கப்பா.., இடைத்தேர்தல் வந்துடும், அப்புறம், திராவிட மாடல் படி நாங்க ஜெயிச்சிட்டோம்னு சொல்லிடுவாங்க. நடை பயிற்சி செய்யவே பயமா இருக்குது. ஏற்கனவே திமுக அமைச்சர் தா.கிருஷ்ணன் நடைபயணம் செய்தபோது கொல்லப்பட்டார். அதில் யார் கொலை செய்தார்கள் என்பது இன்றுவரை தெரியாமல் போய்விட்டது. தற்போது அரசியல் படுகொலைகள் அதிகம் நடைபெறுகிறது. அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை, போதைப்பொருள் நடமாட்டம் அதிகமுள்ளது என்று தொடர்ந்து எங்கள் பொதுச்செயலாளர் சொல்லிக்கொண்டிருக்கிறார்.
`மதுரைக்கு எட்டாயிரம் கோடி நிதி வாங்கிட்டு போனீங்க, ஆனால், மதுரை மக்கள் ஓட்டுப்போடலையேன்னு’ பொதுச்செயலாளர் கேட்டார். எங்களால் அப்போது சரியாக விளக்கம் சொல்ல முடியவில்லை. மதுரை எப்போதும் அதிமுகவின் கோட்டை. தமிழ்நாட்டில் ஆர்பாட்டாம், போராட்டம் எதுவாக இருந்தாலும் மதுரைதான் முன் மாதிரியாக இருக்கும். வாக்கு கேட்டு பிரசாரத்துக்கு எடப்பாடியார் வந்தபோதும், நாங்கள் வாக்கு கேட்டு சென்றபோதும் மக்கள் அதிகம் வந்தார்கள்.
சென்ற இடத்திலெல்லாம் உங்களுக்குத்தான் ஓட்டு.. உங்களுக்குத்தான் ஓட்டு என்று மக்கள் சொன்னார்கள். அதை நாங்கள் நம்பினோம். எங்கள் வேட்பாளரை வானளவு புகழ்ந்தோம். மக்களின் மருத்துவர், ஏழைகளின் மருத்துவர், வலியில்லாமல் ஊசி போடுவார் என்றெல்லாம் சொன்னோம். ஆனால், மக்களில் ஒரு பிரிவினர் இண்டியா கூட்டணிக்கும், இன்னொரு பிரிவினர் பாரதப்பிரதமருக்கும் வாக்களித்தார்கள்.
ஆனால், சட்டமன்றத் தேர்தல் அப்படியிருக்காது. 2026-ல் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவார். வருகின்ற 23- ஆம் தேதி மின்கட்டண உயர்வு,அரசியல் படுகொலைகளை கண்டித்து ஆர்பாட்டம் செய்கிறோம்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88