தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்த கெஜ்ரிவால், “பகத்சிங்கை பின்தொடர்பவன் நான். நாட்டைக் காப்பாற்ற 100 முறை சிறைக்குச் செல்லவேண்டுமென்றாலும் நான் செல்வேன். கெஜ்ரிவால் ஊழல் செய்ததாக பா.ஜ.க கூறுகிறது. ஆனால், அப்படிச் சொல்பவர்களிடம் எந்தவொரு ஆதாரமும் இல்லை. ரூ.100 கோடி ஊழல் நடந்ததாகச் சொல்கிறார்கள். 500 இடங்களில் ரெய்டு நடத்தினார்கள். ஆனால், ஒரு பைசாக்கூட அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அந்த ரூ.100 கோடி காற்றில் கரைந்துவிட்டதா… கெஜ்ரிவால் ஊழல் செய்தாரென்றால் இந்த உலகில் ஒருவர்கூட நேர்மையானவர் கிடையாது என மக்கள் கூறுகின்றனர்.
பா.ஜ.க-வினர் என் குரலை ஒடுக்க விரும்புகிறார்கள். ஆனால், உலகில் எந்த சக்தியாலும் என்னை உடைக்க முடியாது. ஜூன் 2-ம் தேதி மீண்டும் சிறைக்குச் செல்ல நான் தயாராகவே இருக்கிறேன். எனது நாட்டைக் காப்பாற்ற சிறைக்குச் செல்வதில் எனக்குப் பெருமைதான்” என்று கூறினார்.
முன்னதாக, தனியார் ஊடக பேட்டியொன்றில் தான் ஊழல் செய்ததற்கான ஆதாரங்கள் எதுவும் கிடையாது என கெஜ்ரிவால் கூறிவருவது குறித்த கேள்விக்கு, `கெஜ்ரிவால் ஓர் அனுபவமிக்க திருடர்” என்று மோடி பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.