இந்தியாவின் அரசியலமைப்பு என்பது நம் நாட்டின் கொள்கைகள், கலாசாரம், பாரம்பர்யம் உள்ளிட்டவைகளின் ஒட்டுமொத்த வடிவமாகும். நாட்டின் அனைத்து சரித்திரங்களுக்கும், அனைத்து சமூகங்களுக்கும், எல்லா பாரம்பர்யங்களுக்கும் சம மதிப்பு வழங்குவது இந்தியாவின் அரசியலமைப்பு ஆகும். கடந்த பத்து ஆண்டுகளாக இந்திய அரசியலமைப்பு மீது பா.ஜக தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கிறது. ஒரு சமூகத்தை மற்றொரு சமூகத்துக்கு எதிராக போராட தூண்டும்போதும் பா.ஜ.க அரசியலமைப்புச் சட்டத்தின் மீது தாக்குதல் நடத்தியது. ஒரு கொள்கை, ஒரு மொழி, ஒரு கலாசாரத்தையும் பா.ஜ.க திணிக்க முயலும்போது அவர்கள் அரசியலமைப்புமீது தாக்குதல் நடத்துகிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பை இல்லாமல் ஆக்குவோம் என்று தேர்தலுக்கு முன் பா.ஜ.க தலைவர்கள் சொன்னார்கள். 400-க்கும் அதிகமான சீட்டுகள் எங்களுக்கு வேண்டும் என்று பா.ஜ.க கூறியதன் பின்னால் உள்ள ஒரே லட்சியம் இந்த அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி எழுதுவது என்பதாகத்தான் இருந்தது.
இந்த நூற்றாண்டு காட்சிகளின் நூற்றாண்டாகும். ஓவியங்களையும், தொலைக்காட்சிகளையும் பார்க்கும் நூற்றாண்டில் நாம் வாழ்ந்துகொண்டிருகிறோம். அப்படி நாம் பார்ப்பதில் நமக்கு ஒரு மகிழ்ச்சி உண்டு. அ ரசியலமைப்பை மாற்றுவோம் எனக்கூறிய பிரதமர் நரேந்திரமோடி தேர்தல் வெற்றிக்குப் பிறகு அரசியலமைப்பை தலையில் வைத்து வணங்கிய காட்சியை நாம் பார்த்தோம். அதன்மூலம் நாட்டுமக்கள் பிரதமருக்கு ஒரு செய்தியை கூறியுள்ளனர். இந்தியாவின் அரசியலமைப்பை தொட்டு விளையாட நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்ற செய்திதான் அது. அதிகப்படியான பிரச்னைகளுக்கு மத்தியில் உள்ள ஒரு அரசுதான் இன்று மத்தியில் ஆட்சியில் இருக்கிறது. இந்தியா கூட்டணியால் பலத்த அடி வாங்கிய அரசு அதிகாரத்தில் உள்ளது. அதனால் நிமிர்ந்து நடக்கக்கூட முடியாத நிலையில் உள்ள அரசுதான் மத்தியில் உள்ளது. இன்று அதிகாரத்தில் இருப்பது நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் அரசு அல்ல. இந்த தேர்தலில் காங்கிரஸும், இந்தியா கூட்டணியும் இணைந்து நரேந்திர மோடியின் கொள்கைகளை முழுமையாக தோல்வியடையச் செய்துள்ளது. இன்று நீங்கள் பார்க்கும் நரேந்திர மோடி தேர்தலுக்கு முன்பு நாம் பார்த்ததைவிட முற்றிலும் மாறுபட்ட நரேந்திர மோடியாவார்” என்றார்.