விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரங்கள் ஜூலை 8-ம் தேதியோடு நிறைவடைந்த நிலையில், நேற்று வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதில், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியும், யூடியூபருமான சாட்டை துரைமுருகன், தனது கட்சியின் வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உட்பட தி.மு.க தலைவர்களை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தி.மு.க தரப்பிலிருந்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் புகாரில் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவந்த திருச்சி சைபர் க்ரைம் போலீஸார், சாட்டை துரைமுருகனைத் தென்காசி மாவட்டம், குற்றாலம் அருகே இன்று கைதுசெய்தனர். இந்த நிலையில், தி.மு.க பேசினால் கருத்துரிமை நாங்கள் பேசினால் அவமதிப்பா என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியிருக்கிறார்.