நெல்லை மாநகராட்சி தேர்தல்: `சைக்கிள்’ கவுன்சிலர் மேயரானார் – தேர்தல் நடந்ததால் திமுக தலைமை அப்செட்!

நெல்லை மாநகராட்சி மொத்தம் 55 வார்டுகளை கொண்டது. அதில் தி.மு.க சார்பாக 44 கவுன்சிலர்களும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 7 கவுன்சிலர்களும் உள்ளனர். அ.தி.மு.க-வுக்கு நான்கு கவுன்சிலர்கள் மட்டுமே உள்ளனர். நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணனுக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவியதால் சரவணன் ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து இன்று (5-ம் தேதி) மேயர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன்

தி.மு.க சார்பாக மேயர் வேட்பாளராக மூன்று முறை கவுன்சிலராக பொறுப்பு வகிப்பவரும் சைவ வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவருமான ராமகிருஷ்ணன் என்ற கிட்டு அறிவிக்கப்பட்டார். அதிகாரபூர்வ வேட்பாளரான அவர் மாநகராட்சி கமிஷனரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சுகபுத்ராவிடம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். பெரும்பான்மை ஆதரவுடன் அவர் ஏகமனதாக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 6-வது வார்டு கவுன்சிலரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவருமான பவுல்ராஜ் வேட்புமனு தாக்கல் செய்ததால் போட்டி உருவானது.

தி.மு.க மேயர் வேட்பாளரான ராமகிருஷ்ணன் வழக்கம் போல இன்று சைக்கிளிலேயே மாநகராட்சி அலுவலகம் வந்திருந்தார். மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தலில் கவுன்சிலர்கள் வாக்களித்தனர். அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் நேற்று கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வெற்றிச் சான்று பெற்ற ராமகிருஷ்ணன்

அதனால் அதிகாரப்பூர்வ வேட்பாளரான ராமகிருஷ்ணன் மிகப்பெரிய வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஒரு கவுன்சிலர் வாக்களிக்க வராததால் 54 பேர் வாக்களித்த நிலையில், ராமகிருஷ்ணனுக்கு 30 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்ட பவுல்ராஜ் 23 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார். ராமகிருஷணனுக்கு வாக்களித்த நான்கு பேர் மாற்றி வாக்களித்து இருந்தால் நிலைமை மாறியிருக்கும் என்பதால் தி.மு.க நிர்வாகிகளிடம் பரபரப்பு நிலவியது.

நெல்லை மாநகராட்சியில் நீக்கப்பட்ட பவுல்ராஜை தவிர்த்து தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சியினர் 50 பேர் உள்ளனர். தி.மு.க-வினர் மட்டும் 43 பேர் உள்ள நிலையில், தி.மு.க அறிவித்த அதிகாரபூர்வ வேட்பாளரான ராமகிருஷ்ணனுக்கு 30 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. தி.மு.க கவுன்சிலர்கள் 13 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவருக்கு வாக்களித்துள்ளனர்.

அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு

இந்த புள்ளிவிவரங்கள் அனைத்தும் உளவுத்துறை மூலம் கட்சித் தலைமைக்குச் சென்றுள்ளது. இது குறித்து மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் துறையின் அமைச்சர் கே.என்.நேரு ஆகியோரிடம் கட்சித் தலைமை விளக்கம் கேட்டுள்ளதாம். அதனால் அவர்களும் நெல்லை மாநகராட்சி கவுன்சிலர்கள் மீது கோபத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, கட்சிக்கு விரோதமாக செயல்பட்ட கவுன்சிலர்கள் குறித்த விசாரணையை கட்சித் தலைமை முடுக்கி விட்டுள்ளதாக வெளியான தகவல், கவுன்சிலர்களை பீதியடைய வைத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக யாரெல்லாம் கட்சித் தலைமையின் நடவடிக்கைக்கு உள்ளாவார்களோ என்கிற அச்சத்துடன் கவுன்சிலர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கின்றனர்.

நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன்

இதனிடையே நெல்லை மாநகராட்சி புதிய மேயராக தேர்வான ராமகிருஷ்ணன் பேசுகையில், “கலைஞரின் மீதுள்ள பற்றால் கடந்த 43 வருடங்களாக கட்சியில் இருக்கிறேன். எனக்கு மாநகராட்சி மேயர் என்கிற மிகப்பெரிய பொறுப்பை முதல்வர் ஸ்டாலின் கொடுத்துள்ளார். அதற்குக் காரணமாக இருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அப்துல் வஹாப் எம்.எல்.ஏ ஆகியோரின் நம்பிக்கைக்கு உகந்த வகையில் செயல்படுவேன்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *