பா.ம.க-வில் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணிக்கும் இடையேயான உரசல் சமீபகாலத்தில் அதிகரித்து இருக்கிறது. இது வெளிப்படையாக கடந்த பிப்ரவரியில் நடத்த அந்த கூட்டத்தில் வெடித்தது. அப்போது மைக் பிடித்த ராமதாஸ், “எனக்கு 85 வயது தான். ஒரு குறிப்பிட்ட வயதில் ஓய்வு என்பது ஊதியத்துக்காக வேலை செய்பவர்களுக்குத்தான். நான் ஊதியத்திற்காக உழைப்பவன் அல்ல. ஊமை ஜனங்களுக்காக உழைப்பவன். தமிழ்நாட்டில் ஊமை ஜனங்கள் கல்வியிலும், வேலைவாய்பிலும் முன்னேறி விட்டால் நிம்மதியாக ஓய்வெடுக்க செல்வேன். இன்றைய சூழலில் என்னால் ஓய்வெடுத்து ஒதுக்கியிருக்க முடியாது” என்றார்.
இது குறித்து பேசும் உக்கட்சி விவரம் அறிந்த சிலர், “கட்சி ஆரம்பித்ததில் இருந்து கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் ராமதாஸிடம்தான் இருந்து வந்தது. ஆனால் இந்த முறை, ‘எனக்கும் வேண்டும்’ என அன்புமணி முரண்டு பிடித்ததாக தகவல்கள் வெளியானது. அதற்கு ராமதாஸ் ஒத்துக்கொள்ளவில்லை. பாஜக பக்கம் சென்றால் மீண்டும் மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என அன்புமணி எவ்வளோ சொல்லி பார்த்தார் என்றார்கள். ஆனால் ராமதாஸ் அதையெல்லாம் கேட்பதாக இல்லை. மறுபக்கம் அன்புமணியும் விடுவதாக இல்லை. இந்த சூழலில்தான் நாடாளுமன்ற தேர்தல் வந்தது. வேறு வழியில்லாமல் பா.ஜ.க பக்கம் செல்வதற்கு இசைவு தெரிவித்தார், ராமதாஸ்.
ஆனால் தேர்தல் முடிவில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதற்கு பா.ஜ.க-வுடனான கூட்டணியை பாட்டாளிகள் விரும்பாததுதான் காரணம் என பேசப்பட்டது. இந்தசூழலில்தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெற்றது. சமூக ரீதியாக பலம் கொண்டிருக்கும் இந்த தொகுதில் எப்படியும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என களமிறங்கிய பா.ம.க-வுக்கு தோல்விதான் பரிசாக கிடைத்தது. இதற்கு மிக முக்கிய காரணம் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, போட்டியிடாத அ.தி.மு.க எதிர்ப்பு பிரசாரம்தான் என வெளிப்படையாக பேசப்பட்டது.
ஏற்கெனவே பா.ஜ.க-வுடன் வைத்த கூட்டணியால் ஏற்பட்ட தோல்வியில் கடுப்பில் இருந்த பாட்டாளிகளுக்கு, அண்ணாமலையின் செயல்பாடுகள் மேலும் சூடாக்கியது. ராமதஸுக்கும் இதே கோபம்தான். ஆனால் அன்புமணி இதையெல்லாம் கண்டுகொள்வதாக தெரியவில்லை. இந்த சூழலில்தான் 2024 -25-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் முழு பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த ராமதாஸ், “பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி, செல்போன் உள்ளிட்ட பொருட்களின் மீதான சுங்க வரி குறைப்பு, இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் கல்விக்காக புதிய திட்டங்கள், வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு போன்றவை வரவேற்கத்தக்கவை.
அதேநேரத்தில் சேமிப்புகளை ஊக்குவிக்கும் வகையிலான பழைய வருமான வரி முறையில் மாற்றமும் செய்யப்படாததும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாததும் ஏமாற்றம் அளிப்பவையாக உள்ளன. ஆந்திரா, பீகார் மாநிலங்களுக்கு பல சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆந்திராவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்புத் திட்டங்களில் ஒன்றான விசாகப்பட்டினம் To சென்னை தொழில்வழிச் சாலை திட்டத்தால் தமிழ்நாட்டிற்கும் பயன்கள் கிடைக்கும்.
அதே சமயத்தில் தமிழ்நாட்டிற்காக சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது வருத்தமளிக்கிறது. கோதாவரி- காவிரி இணைப்புத் திட்டம் குறித்தும் எந்த அறிவிப்பும் செய்யப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கான தேவைகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிற்கு தேவையான உட்கட்டமைப்புத் திட்டங்கள், பாசனத் திட்டங்கள் போன்றவற்றையும் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நிறைவேற்றப்படும் போது சேர்க்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
ஆனால் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணியோ, “தமிழ்நாடு என்று பட்ஜெட்டில் பெயர் வரவில்லை என்றால், தமிழ்நாட்டில் எங்களுக்கு 25 எம்.பிக்களை ஜெயித்து கொடுத்திருக்க வேண்டும். இன்னும் ஓரிரு நாளில் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எவ்வளவு கிடைத்துள்ளது என்பதை தெளிவாக சொல்லுகிறோம். மொத்தமாக இந்த பட்ஜெட் 48 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட். 48 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எதுவுமே வந்திருக்காதா? எல்லா மாநிலத்தின் பெயரையும் பட்ஜெட்டில் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது. இந்தியாவிற்கே பொதுவானதுதான் பட்ஜெட். தமிழ்நாட்டிற்கு, கேரளாவிற்கு, கர்நாடகத்திற்கு என்று ஒவ்வொரு மாநிலத்திற்கும் பெயர் சொல்ல முடியாது. 100 தொழிற்பூங்காக்கள் இந்தியாவில் தொடங்குகிறார்கள். அதில் தமிழ்நாடு வராதா என்ன?” என தெரிவித்துள்ளார். இப்படியாக ராமதாஸ், அன்புமணி இடையே மீண்டும் மோதல் வெடித்திருக்கிறது” என்றனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், “கடந்த 20 ஆண்டுகளாக ராமதாஸ் ஒரு முடிவு எடுப்பார். பிறகு அதற்கு எதிரான முடிவை அன்புமணி எடுப்பார். இறுதியில் அன்புமணிதான் வெற்றி பெறுவார். அ.தி.மு.க கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்பது ராமதாஸின் முடிவு. ஆனால் அன்புமணி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இறுதியாக எப்படியோ தந்தையை மசியவைத்து பா.ஜ.க கூட்டணிக்கு சென்றுவிட்டார். ஒட்டுமொத்த நிர்வாகிகளும் டாக்டர் ராமதாஸின் முடிவுக்குதான் காத்திருக்கிறார்கள். ஆனால் அன்புமணி ஒவ்வொருமுறையும் முடிவுகளை மாற்றிவிடுகிறார்.
25 இடங்களை நீங்கள் வென்று கொடுத்திருந்தால் தமிழருக்கும், தமிழ்நாட்டுக்குமான திட்டம் இருந்திருக்கும் என அன்புமணி சொல்வது வேதனையாக இருக்கிறது. அவருடைய தந்தை முதல்நாளே தமிழகத்திற்கான திட்டம் இல்லை என அறிக்கை வெளியிட்டு இருந்தார். ஆனால் மகன் 25 இடங்களை கொடுத்தீர்களா என கேட்கிறார். இந்த நேரத்தில் வைரமுத்து எழுதிய கவிதையை நான் நினைவு கூற விரும்புகிறேன். அந்த கவிதையில், மழை அனைவருக்கும் பொதுவானது. ஆகவே மழை இன்னாருக்கு பெய்வேன்.. இன்னாருக்கு பெய்யமாட்டேன் என சொல்வதில்லை. அதுபோலதான் மத்திய அரசு இருக்க வேண்டும் என சொல்லியிருக்கிறார் வைரமுத்து.
இதேபோல் கடந்த 2021-ம் ஆண்டு ஸ்டாலின், ‘எனக்கு ஓட்டு போடாதவர்களும் ஏன் ஓட்டுபோடவில்லை என கவலைகொள்ளும் அளவுக்கு ஆட்சி செய்வேன்’ என்றார். அதுதான் பெருந்தன்மை. இப்படித்தான் மத்திய அரசு இருக்க வேண்டும். ஆனால் மைனாரிட்டி வந்தும் அவர்கள் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பது பா.ஜ.க மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு. ஆனால் அவர்களுடன் கூட்டணி வைத்த பாவத்திற்கு அன்புமணி பேசும் பேச்சை துளி கூட ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88