பர்கூர் பாலியல் விவகாரம்: தந்தை, மகன் மரணம்; `யாரையோ காப்பாற்றும் முயற்சியா?' – அண்ணாமலை சந்தேகம்

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பள்ளி மாணவி ‘பாலியல்’ வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியும், ‘போலி’ என்.சி.சி மாஸ்டருமான சிவராமன், வலது கால் முறிந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதற்கிடையில், அவரை மருத்துவப் பரிசோதனை செய்ததில், மருத்துவர்கள், கைதுக்கு முன்பு அவர் ‘எலி பேஸ்ட்’ சாப்பிட்டதாக தெரியவந்தது. இதையடுத்து, செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை பெற்று வந்த சிவராமன் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

சிவராமன்

இந்த நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தன் எக்ஸ் பக்கத்தில், “கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே, தனியார் பள்ளியில் போலி என்.சி.சி முகாம் நடத்தி, பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான, நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன், காவல்துறை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு முன்பாகவே, எலி மருந்து சாப்பிட்டு, இன்று காலை உயிரிழந்துள்ளதாகக் கூறுகின்றனர். மேலும், அவரது தந்தை அசோக் குமார் என்பவரும், நேற்று இரவு சாலை விபத்தில் மரணமடைந்துள்ளதாகத் தெரிய வருகிறது.

இந்த இரண்டு மரணங்களுமே, சந்தேகத்திற்கிடமானவையாக இருக்கின்றன. சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையில், சிவராமன் இந்த பாலியல் குற்றத்தில் தொடர்புடைய வேறு யாரேனும் முக்கியப் புள்ளிகளின் பெயர்களை வெளியில் கூறிவிடுவாரோ என்ற அச்சத்தில், சிவராமன் கொல்லப்பட்டிருக்கலாமோ என்ற கேள்வி எழுகிறது.

அண்ணாமலை

உண்மையில் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனரா அல்லது யாரையோ காப்பாற்றும் முயற்சியாக, தந்தை, மகன் இருவரின் மரணங்களும் நிகழ்ந்துள்ளனவா என்ற பலத்த சந்தேகம் எழுகிறது. பள்ளி மாணவிகள் பாலியல் வன்முறை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு, இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, இந்த கேள்விகளுக்கான உண்மையான பதில்களை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *