“முன்னாள் நீதிபதி சந்துரு வழங்கிய அறிக்கையின் பரிந்துரைகள் சர்ச்சைக்குரியதாகவும், ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையிலும் இருப்பதாவும் சொல்கிறார்” பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா. மேலும் அவர், “இந்த அறிக்கையை மாநில அரசு முழுவதுமாக நிராகரிக்க வேண்டும். ஹிஜாப் அணிய தடைவிதித்தால் அது தவறு, ஹிஜாப் அணிய அனுமதி வேண்டும் என்று கூறும் ஒரு குழு இன்று, இந்துப் பெண்கள் நெற்றியில் பொட்டு வைத்துவரக் கூடாது, கைகளில் கயிறு கட்டக் கூடாது என்கிறது. எப்படி நெற்றியில் திலகம் வைக்கக் கூடாது என்று கூறலாம்… எனவே ஒரு குறிப்பிட்ட மதத்தை குறிவைக்கும் விதமாக இந்த அறிக்கை இருக்கிறது. ஏதோ உள்நோக்கத்துடன் இந்த அறிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. மாநில அரசு இதை ஏற்கக் கூடாது என்று மைய குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.” என தெரிவித்துள்ளார்.
ஆனால், ‘ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் அறிக்கையை வரவேற்பதாக’ வி.சி.க சொல்கிறது. தொல். திருமாவளவன் இது தொடர்பாக, “நீதிநாயகம் சந்துரு அவர்களின் தலைமையிலான குழு தமிழக அரசுக்கு அளித்துள்ள பரிந்துரைகள் சமூப்பொறுப்புணர்வுடன், தொலைநோக்குப் பார்வையுடன், உயரிய நோக்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ளன. சாதி அடிப்படையில் மாணவச் சமூகம் சீரழிந்துவிடாமல் பாதுகாக்கப்பட வேண்டுமென்கிற நல்லெண்ணத்தோடு பரிந்துரைகளை வழங்கியுள்ள நீதிநாயகம் சந்துரு அவர்களுக்கு எமது பாராட்டுகள். தமிழ்நாடு அரசு அப்பரிந்துரைகளை நடைமுறைப்படுத்திட முன்வர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
விசிக பொதுச் செயலாளர் எழில் கரோலின் “சமூகத்திலேயே சாதி வேண்டாம் என சொல்கிறோம். ஆகவே பள்ளி, கல்லூரிகளிலும் இருக்க கூடாது. கயிறு கட்டுதல், திருநீறு அணிதல், சிலுவை போட்டுக்கொள்ளுதல் தேவையில்லை. வெளிநாடுகளில் இதுபோன்று யாரும் செய்வது இல்லை. அங்கு சாதியையும் இல்லை. இடஒதுக்கீட்டுக்கு பயன்படுத்துகிறோம். ஆனால் குழந்தைகள் மனதில் விதைக்க வேண்டிய அவசியம் இல்லை. கல்வி சமமான அங்கீகாரத்தை கொடுக்கிறது. சாதி கட்டமைப்பை எப்படி உடைக்க வேண்டும் என்றுதான் படிக்கும் போது கற்றுத்தர வேண்டும். அப்போது ஆணவ கொலைகளை தடுக்க முடியும். ஆண், பெண் பாகுபாடு இருக்காது. பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும். ஆகவே இதை விசிக வரவேற்கிறது” என்கிறார்.
பல்வேறு தரப்பிலும் இதற்கு ஆதரவு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. தேனியில் ஊராட்சி குழு கூட்டத்தில் இந்த அறிக்கையினை துணைத்தலைவர் கிழித்தெறிந்திருக்கிறார். மறுபக்கம் இது தேவையான ஒன்று என்ற ஆதரவு குரல்களும் எழுந்திருக்கிறது.
இதனிடையே, தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழுவாவனது ஒரு விளக்கத்தை அளித்துள்ளது. அதன்படி, “இந்துக்கள் அணியும் கோயில் ரட்சை, அதாவது கயிறு மற்றும் நெற்றி திலகம் ஆகியவற்றை தடை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு கமிட்டி தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைத்திருப்பதாக இணையதளத்தில் செய்தி பகிரப்படுகிறது. இது பொய்யான தகவல் என உண்மை கண்டறியும் குழு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக நீதியரசர் சந்துருவுடன் நேரடியாக பேசிய குழு அவரின் விளக்கத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி நீதியரசர் சந்துரு, “ஒரு நபர் கமிட்டியின் நோக்கமே மாணவர்களிடையே சாதிய வேறுபாடுகளை களைவதுதான். சாதிய கயறுகளைப் போலவே சாதிய குறியீடாக சிலர் வண்ணத் திலகங்களை பயன்படுத்தக் கூடும் என்பதே எமது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பொட்டு, திருநீறு, நாமம், குங்குமம் சந்தனப்பொட்டு முதலிய ஆன்மீக அடையாளங்களை தடை செய்ய அறிக்கை பரிந்துரைக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88