‘வீழ்த்தவே முடியாதவர், இவருக்கு நிகரான தலைவர்கள் இந்தியாவில் இல்லை, விஷ்வ குரு’ என்று வலம் வந்தவர் பிரதமர் மோடி. கடைசியில், தான் ஒரு மனிதப்பிறவியே அல்ல என்றும், பரமாத்மாவால் அனுப்பிவைக்கப்பட்டவன் என்றும் அவர் சொல்ல ஆரம்பித்துவிட்டார்.
பா.ஜ.க 370 இடங்களிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களிலும் வெல்லும் என்று முதலில் ஆரம்பித்தவர் பிரதமர் மோடிதான். அதன் பிறகு, அமித் ஷா உள்ளிட்ட மற்ற பா.ஜ.க தலைவர்கள் எல்லோரும் 370, 400 இடங்கள் என்று பேசத் தொடங்கினார்கள்.
ஆனால், பிரதமர் நரேந்திர மோடி சொன்னதற்கு நேர்மாறாக தேர்தல் முடிவுகள் இருக்கின்றன. 2019 மக்களவைத் தேர்தலில் 303 இடங்களில் வெற்றிபெற்று அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற பா.ஜ.க, இந்த முறை 240 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றிருக்கிறது. பிரதமர் மோடியின் சரிவு அவர் போட்டியிட்ட வாரணாசி தொகுதியிலிருந்துதான் முதலில் ஆரம்பித்தது. 1.4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் மோடி ஜெயித்திருக்கிறார் என்றாலும், முதல் மூன்று சுற்று வாக்கு எண்ணிக்கையில் அவர் பின்னடைவைச் சந்தித்தார். ஐந்து சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயைவிட வெறும் ஆறாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் மோடி முன்னிலையில் இருந்தார்.
‘விஷ்வகுரு’வாக இருந்து உலகுக்கு வழிகாட்டுபவருக்கு, பரமாத்மாவால் அனுப்பிவைக்கப்பட்டவருக்கு சில நிமிடங்கள் தோல்வி பயத்தைக் காட்டிவிட்டார்கள் வாரணாசி தொகுதி மக்கள். வாரணாசி தொகுதியில் 2019-ம் ஆண்டு 4.8 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்த பிரதமர் மோடி, 2024-ல் வெறும் 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றிபெற்றிருக்கிறார். அவர் பெற்ற வாக்கு சதவிகிதம் 63.6 சதவிகிதத்திலிருந்து 54.2 சதவிகிதமாக சரிந்திருக்கிறது. அதாவது, பிரதமர் மோடியின் செல்வாக்கு வெகுவாக வீழ்ச்சியடைந்திருக்கிறது எனச் சொல்லலாம்.
பா.ஜ.க-வின் தேசியத் தலைவராக ஜே.பி.நட்டா இருந்தாலும், மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியின் தலைமையில்தான் நாடு முழுவதும் பா.ஜ.க-வுக்கான பிரசாரம் நடைபெற்றது. அதிக குழந்தைகள் பெற்றவர்கள், ஊடுருவல்காரர்கள் என்றும், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஓ.பி.சி இட ஒதுக்கீட்டைப் பறித்து இஸ்லாமியர்களுக்கு கொடுத்துவிடுவார்கள் என்ற ரீதியிலும் பிரதமர் மோடி மேற்கொண்ட பிரசாரத்தைப் பெரும் பகுதி மக்கள் புறக்கணித்திருக்கிறார்கள் என்பதை, தேர்தல் முடிவுகள் காண்பிக்கின்றன.
மோடியின் பிரசாரம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்றால், மோடி புறக்கணிக்கப்பட்டிருக்கிறார் என்று அர்த்தம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். மக்களில் பெரும்பான்மையோர் பிரதமர் மோடியையும், அவரது அரசியலையும், அவரது கருத்தியல்களையும் புறக்கணித்திருக்கிறார்கள் என்று எதிர்க்கட்சியினர் சொல்லிவருகிறார்கள்.
மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வருவதற்கு எப்போதுமே துணை நின்றது அயோத்தி ராமர் கோயில் விவகாரம்தான். இப்போது, ராமரே பா.ஜ.க-வையும், மோடியையும் கைவிட்டுவிட்டார் என்ற விமர்சனம் பரவலாக எழுந்திருக்கிறது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் மிகப்பெரிய ராமர் கோயில் எழுப்பப்பட்டு, அதன் திறப்பு விழா பிரமாண்டமாக நடத்தப்பட்டது என்றாலும்… தேர்தல் பிரசாரத்தில் ராமர் கோயிலை பெரிய சாதனையாக பிரதமர் மோடி முன்னிறுத்தவில்லை. இந்த நிலையில், ராமர் கோயில் அமைந்திருக்கும் ஃபைசாபாத் தொகுதி மக்களே பா.ஜ.க-வைப் புறக்கணித்திருக்கிறார்கள். அங்கு, காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றிருக்கிறது.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பா.ஜ.க அலுவலகத்தில் பேசிய பிரதமர் மோடி, ஜெய் ஜெகந்நாத் என்று முழங்கினார்.
‘மதரீதியான வெறுப்புப் பிரசாரத்தை பிரதமர் மோடி முன்னெடுக்கிறார்’ என்று எதிர்க்கட்சியினர் தேர்தல் ஆணையத்திடம் தொடர்ந்து புகார்களைத் தெரிவித்துவந்தாலும், கடைசிவரை மோடிமீது எந்த நடவடிக்கையையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை. விளக்கம் கேட்டு அவருக்கு ஒரு நோட்டீஸ்கூட அனுப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி இருந்தும், ஆட்சியமைக்கத் தேவையான இடங்களைக்கூட பா.ஜ.க-வால் பெற முடியவில்லை.
`மதவாத வெறுப்பு அரசியல்… மத்தியில் பா.ஜ.க-வின் நிர்வாகச் செயல்பாடுகளால் மக்களிடையே ஏற்பட்ட அதிருப்தி’ என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை… இவையனைத்தும் இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. எதிர்க்கட்சிகள் சொல்வதுபோல, `பா.ஜ.க பெரும்பான்மையை இழந்திருக்கிறது… பிரதமர் மோடியை இந்தியா புறக்கணித்திருக்கிறது’ என்பதையே தேர்தல் முடிவுகள் சொல்கின்றன.