நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் ராமர் கோயில் இருக்கும் அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் பா.ஜ.க தோல்வியை தழுவியது பா.ஜ கட்சியினர் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ராமர் கோயில் கட்டுவதன் மூலம் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று பா.ஜ.க கணக்கு போட்டதாக எதிர்க்கட்சிகள் சாடியது. பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும், உத்தரப்பிரதேசமோ அல்லது ராமர் கோயிலோ பா.ஜ.க ஆட்சிக்கு உதவவில்லை. இத்தோல்வி குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அளித்த பேட்டியில், “‘பா.ஜ.க 5 ஆண்டுகளுக்கு முன்பு 300 தொகுதிகளுக்கும் அதிகமாக வென்றது. ஆனால் இப்போது அந்த எண்ணிக்கை 240 ஆக குறைந்துவிட்டது. 60 தொகுதிகள் குறைந்துள்ளது. மிகவும் முக்கியமான மாநிலமாக கருதப்படும் உத்தரப்பிரதேசத்தில் மக்கள் வித்தியாசமான தீர்ப்பை வழங்கி இருக்கின்றனர்.
ராமர் கோயில் பா.ஜ.கவின் தேர்தல் கொள்கையாக இருக்கும் என்றும், அதன் மூலம் பா.ஜ.கவுக்கு வாக்கு கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால் நமது நாட்டு மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட்டுள்ளனர். கோயில் பெயரை சொல்லி ஓட்டுக்கேட்பதை தெரிந்து கொண்ட மக்கள் புதிய வழியை தேர்ந்தெடுத்தனர். அதனால் பா.ஜ.க தோல்வியடைந்தது. மக்களிடம் ஓட்டுக்கேட்க கோயில் பயன்படுத்தப்படுவதாக நாங்கள் அச்சம் அடைந்தோம். ஆனால் அயோத்தி மக்கள் தேர்தலில் தோல்வியை கொடுத்து பா.ஜ.கவின் கோயில் அரசியலை எவ்வாறு சரி செய்வது என்பதை காட்டி இருக்கின்றனர். நாட்டின் ஜனநாயகம் அப்படியே இருக்கிறது. அதற்கு காரணம் அரசியல் கிடையாது. நாட்டுமக்களின் கூட்டு மனசாட்சியால் தான் ஜனநாயகம் அப்படியே இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்களின் கடுமையான செயல்பாடுகளால் நாட்டு மக்களை மீண்டும் தரைக்கு கொண்டு வந்துவிட்டனர். இப்போது சந்திரபாபு நாயுடு மற்றும் நிதீஷ் குமார் உதவியுடன் நரேந்திர மோடி ஆட்சி அமைத்திருக்கிறார். அடுத்தவர் தயவில் ஆட்சி செய்யும் போது அட்ஜெஸ்மென்ட் என்பதை புறக்கணிக்க முடியாது. அது போன்ற ஒரு நிலை இப்போது ஏற்பட்டுள்ளது” என்றார்.