இந்த நிலையில், ஸ்டாலினின் இத்தகைய விமர்சனத்துக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், “ “Go Back Modi’ என்று, 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது யார் ஆட்சிக்கு வரக் கூடாது என்று மேடைக்கு மேடை பேசினாரோ, அந்த பொம்மை முதலமைச்சர், மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன், தன் ஆட்சியைக் காப்பாற்ற பா.ஜ.க-வின் மூத்த மத்திய அமைச்சர் ஒருவரை அழைத்து விழாவை நடத்தியுள்ளார். இது குறித்தும், காங்கிரஸ் தலைவர்களை ஏன் அழைக்கவில்லை என்றும் நான் கேட்டதற்கு ஸ்டாலின் ஏன் இவ்வளவு எரிச்சல்பட வேண்டும்?
இது தி.மு.க நிகழ்ச்சி அல்ல, மத்திய அரசின் நிகழ்ச்சி என்றும், மத்திய அரசின் நிகழ்ச்சி என்பதால் ராகுல் காந்தியை அழைக்க அவசியமில்லை என்றும், பா.ஜ.க-வுடன் ரகசிய உறவு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்றும் பயத்தில் உளறியிருக்கிறார். இந்த நிகழ்ச்சி தமிழ்நாடு அரசு நடத்திய அரசு விழா. அழைப்பிதழில் எந்த இடத்திலும் மத்திய அரசுத் துறையின் பெயர் இடம்பெறவில்லை. கலைஞர் 100 என்ற இலச்சினையுடன், தமிழ்நாடு அரசு இலட்சினைதான் இடம் பெற்றுள்ளது. அனைத்துக்கும் மேலாக, அழைப்பிதழில் அனைவரையும் அழைத்தவர் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர்.