தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரியை அடுத்துள்ள ஊர், கேம்பலாபாத். திருச்செந்தூர் செல்லும் வழிப்பாதையில் வலது புறம் உள்ள இந்த ஊரில், சுமார் 540 வீடுகள் உள்ளன. 2,500-க்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வசித்துவருகின்றனர். கடந்த வருடம் டிசம்பர் மாதம் 17-ம் தேதி ஏற்பட்ட மழை வெள்ளத்தால், கேம்பலாபாத் பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டது.
சிறிய கிராமமான கேம்பலாபாத்தில் நான்கு தெருக்கள், இரண்டு கடைகள் மட்டுமே உள்ள. எனவே மக்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய மற்ற ஊர்களுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. அவசரத்துக்கு மருத்துவமனைக்குச் செல்வதற்கு, பள்ளிக்கூடம் செல்வதற்குத் தொடங்கி மளிகைப் பொருள்கள் வாங்குவது வரைக்கும் இந்த ஊர் மக்களுக்கு பொது போக்குவரத்து என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு தூத்துக்குடியில் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்பைத் தொடர்ந்து, அபாய நிலையில் இருப்பதாகக் கூறி, கேம்பலாபாத் ஊரின் ஒரு பக்க பேருந்து நிறுத்தக் கட்டடத்தை அரசு அதிகாரிகள் இடித்துத் தள்ளினர்.
அதே நேரத்தில், சாலையின் மறுபக்கத்தில் அமைந்திருந்த பேருந்து நிறுத்தக் கட்டடத்தை, `சாலை விரிவாக்கப் பணி” எனக் கூறி, இடித்து அகற்றியிருக்கின்றனர். ஆனால், பல மாதங்களாகியும் இடித்த பேருந்து நிறுத்தங்களுக்கு பதிலாக, புது பேருந்து நிறுத்தங்களை அமைக்காமல் அதிகாரிகள் அலைக்கழித்து வருவதாக, கேம்பலாபாத் ஊர் மக்கள் குமுறுகிறார்கள்.