`பாலியல் தொந்தரவு; சிறியவர் முதல் பெரியவர் வரை ஈடுபடுகின்றனர்..!' – ஜி.கே.வாசன் வேதனை

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், ”பொது வாழ்வில் மக்கள் பணியாற்றுவதற்கு ஜனநாயகத்தில் அனைவருக்கும் இடம் உண்டு. அந்த வகையிலே கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி நடத்தி வருகிறார். அதன் கட்சிக்கொடி அறிமுக விழா இன்று நடைபெறுகிறது.

ஜி.கே.வாசன் செய்தியாளர் சந்திப்பு

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் விஜய்க்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் பணி இயக்கப் பணி… இதன் அடிப்படையில் மக்களுடைய நம்பிக்கையை பெற வேண்டும். மக்கள் குரலே மகேசன் குரல் என்று கூறுவோம் அந்த வகையிலே மக்களுடைய நம்பிக்கைக்கு ஏற்றவாறு செயல்படுபவர்களுக்கு வாக்கு உண்டு என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.

பாலியல் தொந்தரவு என்பது உலக அளவிலேயே இருக்கக் கூடாது. தனிமனித ஒழுக்கம்தான் முக்கியம் என்பதில் இதற்கு மாற்று கருத்து கிடையாது. ஒவ்வொருவரும் தனிமனித ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஈடுபடுவது வேதனைக்குரிய விஷயம்.

ஜி.கே.வாசன்

பாலியல் சம்பவங்களில் ஈடுபடுபவர் முதல் நிலைகளிலேயே தெரிந்தாலே அவர்களுக்கு உடனடியாக தூக்கு தண்டனை வழங்க வேண்டும், அப்படி கடுமையான தண்டனை இருக்குமேயானால் அடிப்படை பயம் ஏற்படும்.  பொதுவாக சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு போதைபொருள்கள்  மற்றும் குடிப்பழக்கமே காரணமாக உள்ளது. போதைப்பொருள்கள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ”என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *