`பா.ம.க பின்னால் மக்கள் திரள தயங்குவது ஏன்?' – ராமதாஸ் வேதனையும் பின்னணியும்

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த பா.ம.க-வுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அதிகம் எதிர்பார்த்த தர்மபுரியில் கூட வெற்றிபெற முடியவில்லை. இந்தசூழலில்தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெற்றது. சமூக ரீதியாக பலம் கொண்டிருக்கும் இந்த தொகுதில் எப்படியும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என பா.ம.க விரும்பியது. ஆனால் தேர்தல் முடிவில் அதுவும் நடைபெறவில்லை. விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் வேட்பாளர் அன்னியூர் சிவா என்ற சிவசண்முகம் 1,24,053 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் சி.அன்புமணிக்கு 56,296 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இதனால் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார்கள் பாட்டாளிகள்.

அன்புமணி, ஸாடாலின், சீமன்

இந்த சூழலில்தான் திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் 36-ம் ஆண்டு விழா நடைபெற்றது. அப்போது கட்சிக் கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார், நிறுவனர் ராமதாஸ். பிறகு செய்தியாளர்களிடம் பேசியவர், “சமூக ஜனநாயகம் என்ற கொள்கையில் தொடர்ந்து தமிழக மக்களுக்காக பாடுபட்டுவரும் பா.ம.க-வை ஏனோ மக்கள் ஏற்க முன்வருவதில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், பா.ம.க மக்களுக்காக தொடர்ந்து போராடி வருகிறது. எந்தப் பிரச்னையாக இருந்தாலும் என்னிடம்தான் வருகிறார்கள். அவர்களுக்காக பா.ம.க-தான் போராடுகிறது. ஆனாலும் மக்கள் என் பின்னால் முழுமையாக வரத் தயங்குகிறார்கள். ஆனால் எதிர்காலத்தில் ஒட்டுமொத்த மக்களும் பா.ம.க பின்னால் வரும்போது ஒளிமயமான எதிர்காலத்தை தமிழகத்தில் உருவாக்குவோம் என்று இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

மின் கட்டண உயர்வு குறித்து முன்பே பா.ம.க எச்சரித்தது. நேற்று மின் கட்டண உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்தில் தமிழக மக்களை விலைகொடுத்து வாங்கிவிடுகிறார்கள். அதற்கு யார் எதிர்ப்பு தெரிவிக்கப் போகிறார்கள்.. என்ன செய்யப் போகிறார்கள்.. இதற்கு என்ன தண்டனை கொடுக்கப்போகிறார்கள்.. இந்த மக்களுக்காக எத்தனை போராட்டம் நடத்தினாலும் தேர்தல் நேரத்தில் நல்ல கட்சியை, வித்தியாசமான கட்சியை கோட்டைக்கு அனுப்பத் தவறிவிடுகிறார்கள். ஆனாலும், பா.ம.க தன் பணியை தொடர்ந்து செய்து வருகிறது. நாள்தோறும் மக்கள் பிரச்னைகளுக்காக அறிக்கைவிட்டு வருகிறது. உலகின் 60 நாடுகளில் உள்ள சமூக ஜனநாயகத்தைத்தான் பா.ம.க முன்னெடுத்துள்ளது” என்றார்.

அண்ணாமலை, அன்புமணி

இதுகுறித்து நம்மிடம் பேசிய பாட்டாளி சொந்தங்கள், “நாடாளுமன்ற தேர்தல் ஆரம்பித்தது முதலே ஐயாவுக்கு வருத்தம்தான். ஏனெனில் அவர் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்கலாம் என்றுதான் விரும்பினார். அதற்கு 2026 தேர்தல் கணக்கும் ஒரு காரணம். ஆனால் அன்புமணி முடிவை ஏற்கவில்லை. முடிவில் கடுமையான வேலை செய்த தர்மபுரியில் கூட தோல்வியை சந்தித்தோம். கூடவே கட்சிக்கான அங்கீகாரமும் போய்விட்டது. இதில் பெரியவருக்கு அப்செட். இந்த சூழலில்தான் விக்கிரவாண்டி இடைத் தேர்தல் வந்தது. ஐயாவை பொறுத்தவரையில் இடைத்தேர்தல்களில் போட்டியிட கூடாது என்றுதான் நினைப்பார். ஆனால் இந்தமுறை எப்படியும் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்பதற்காகவே களத்துக்கு வந்தார். அ.தி.மு.க தேர்தலில் போட்டியிடாததால் அவர்களின் வாக்குகளை பெற வேண்டும் என்பதில் தீவிரம் காட்டினோம். கடைசி நேரத்தில் அண்ணாமலை மேற்கொண்ட `அதிமுக எதிர்ப்பு’ பிரசாரம் அனைத்துக்கும் வேட்டு வைத்து விட்டது. இவ்வாறு தொடர்ந்து ஏற்படும் தோல்விகள்தான் மருத்துவருக்கு சோகத்தை கொடுத்திருக்கிறது. அதனால்தான் அப்படி பேசினார்” என்கிறார்கள்.

இதையடுத்து பா.ம.க பின்னால் மக்கள் திரளத் தயங்குவது ஏன்? என்கிற கேள்வியுடன் மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் பேசினோம், “மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்ற ராமதாஸின் கொள்கை வரவேற்கத் தக்கது. அடிப்படையில் அவர்கள் வன்னியர்களின் வாக்கு வங்கியில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். மற்ற சமுதாய மக்களின் வாக்குகளை பெறுவதில் கவனம் செலுத்துவதில்லை. தற்போது பா.ஜ.க கூட்டணியில் இருப்பதால் சிறுபான்மையின மக்களின் வாக்குகளும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதில் கவனம் செலுத்தினால்தான் அவர்கள் பின்பு மக்கள் வருவார்கள். விக்கிரவாண்டி தேர்தலில் 28% வாக்குகளை பெற்றுள்ளனர். ஆனால் தி.மு.க கூடுதல் வாக்குகளை பெற்றிருக்கிறது.

ப்ரியன்

தி.மு.க, அ.தி.மு.க கூட்டணியில் இருக்கும் போது சிறுபான்மையின மக்கள், பட்டியலின மக்களின் வாக்குகள் பா.ம.க-வுக்கு கிடைக்கிறது. தனியாக தேர்தலை சந்திக்கும் போது சமுதாய வாக்குகள் மட்டுமே கிடைக்கிறது. பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தது முதல் பட்டியலின வாக்குகள் முழுமையாக கிடைக்காமல் போய்விட்டது. ஆனால் அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் இருந்ததால் இடைநிலை வாக்குகள் ஓரளவுக்கு கிடைத்தது. ஆனால் அ.தி.மு.க இல்லாமல் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தது முதல் பட்டியலின மக்கள், சிறுபான்மையின மக்கள் வாக்குகள் சுத்தமாகவே கிடைக்கவில்லை. இதனால்தான் தேர்தல்களில் வெற்றிபெற முடியவில்லை. எனவே வாக்கு வங்கியை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கான வேலைகளை செய்ய வேண்டும். அதைவிடுத்துவிட்டு வருத்தப்படுவதால் எதுவும் நடந்துவிடாது” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *