பிரதமர் வீட்டு வசதி திட்ட நிதியில் முறைகேடு

பிரதமர் வீட்டு வசதி திட்ட நிதியில் முறைகேடு செய்ததாக கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 13 அரசு அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை கையாடல் செய்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி கங்காதரன் என்பவர் 2021ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் பி.பி.பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத்தரப்பில், முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் அப்போதைய இணை இயக்குனர் ஈஸ்வரன், விசாரணை நடத்தி, 13 அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

மேலும், கையாடல் செய்த பணத்தை வசூலிக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: பழம்பெரும் பின்னணி பாடகி பி.சுசீலா மருத்துவமனையில் அனுமதி!

இதை பதிவு செய்த நீதிபதிகள், முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க அவசியமில்லை எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *