பிரதமர் வேட்பாளர்: NDA-வுக்கு மோடி? I.N.D.I.A-வுக்கு?! – நெருங்கிய க்ளைமேக்ஸ்; பறக்கும் விவாதங்கள்!

பா.ஜ.க மூன்றாவது முறையாக மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்துவிட்டு களமிறங்கியது. மறுபக்கம் காங்கிரஸ் தலைமையிலான `இந்தியா’ கூட்டணியால் பிரதமர் வேட்பாளரை அறிவிக்க முடியவில்லை. அந்த அணியில் 28 கட்சிகள் உள்ளன. இதனால் மூத்த தலைவர்களுக்குள் ஏற்பட்ட ஈகோ மோதலில் சீட் பகிர்வில் தொடக்கி பிரதமர் வேட்பாளரை அறிவிப்பது வரையில் சிக்கல் ஏற்பட்டது. சூழ்நிலையை புரிந்துகொண்ட காங்கிரஸ் மாநில கட்சிகள் பலமாக இருக்கும் இடங்களில் மாநில கட்சிகளுக்கு கூடுதல் இடங்களை விட்டு கொடுத்தது. அதே நேரத்தில் காங்கிரஸ் பலமாக இருக்கும் இடங்களில் களமாடுவதற்கு தயங்கவும் இல்லை. ஆனால், ‘இந்தியா கூட்டணியால் பிரதமர் வேட்பாளரையே அறிவிக்க முடியவில்லை. ஆண்டுக்கு ஒரு பிரதமர் இருப்பார்’ என்றெல்லாம் பா.ஜ.க தலைவர்கள் விமர்சனம் செய்தார்கள்.

இந்தியா கூட்டணி

ஆனால் இதற்கு முன்பும் இப்படி நடந்து இருக்கிறது. அதாவது ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரை பிரதமர் வேட்பாளராக அறிவித்துவிட்டு காங்கிரஸ் தேர்தலை சந்தித்து இருக்கிறது. அதேநேரத்தில் வி.பி.சிங், ஐ.கே.குஜ்ரால், வாஜ்பாய், தேவ கவுடா ஆகியோர் அவ்வாறு அறிவிக்கப்படாமல் பிரதமராக வந்தவர்கள்தான். எனவேதான் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். அதன்படி இறுதிக்கட்ட பிரசாரமும் ஓய்ந்துவிட்டது. விரைவில் முடிவுகளும் வெளியாக இருக்கின்றன. இதையடுத்து இந்தியா கூட்டணி வெல்லும் பட்சத்தில் யார் பிரதமர் என்கிற கேள்வி எழுகிறது.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் அளித்த பேட்டியில், “மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு உறுதியாக வெற்றியடையும். தேர்தல் வெற்றிக்குப் பின்னர் 48 மணி நேரத்துக்குள் கூட்டணியின் பிரதமர் தேர்வு செய்யப்படுவார். கூட்டணியில் அதிகபட்ச இடங்களைப் பெறும் கட்சி அதன் தலைமைக்கு இயற்கையான உரிமை கோருபவராக இருக்கும் என்பது நியாயமான காரணம். கீழ் சபையில் பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களுக்கு மேல் இந்தியா கூட்டணி பெறும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) உள்ள கட்சிகள் எங்கள் கூட்டணியில் சேரக்கூடும். நிதஷ்குமார் ‘பல்டி’ அடிப்பதில் மாஸ்டர். சந்திரபாபு நாயுடு கடந்த 2019-ல் காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்தார். எனவே அக்கட்சிகளை இந்தியா கூட்டணியில் சேர்ப்பதா, வேண்டாமா என்பதை காங்கிரஸின் உயர்மட்ட தலைவர்களான மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் முடிவு செய்வார்கள்” என்றார்.

தேசிய ஜனநாயக கூட்டணி

இதையடுத்து காங்கிரஸ் வியூக வகுப்பாளர்கள் சிலரிடம் பேசினோம், “அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியை பொறுத்தவரையில் இந்தமுறை மிகவும் சரியாகவே காய்களை நகர்த்துகிறது என்றுதான் சொல்ல வேண்டும். கடைசி வரையில் தொகுதி பங்கீட்டில் மம்தா உள்ளிட்ட சில தலைவர்கள் முரண்டு பிடித்து வந்தார்கள். அவர்களையெல்லாம் சோனியா காந்தி தலையிட்டு சமாதானம் செய்தார். இதேபோல் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை தோற்கடித்துவிட்டேன் என்கிற விளம்பரத்தில் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்துவந்தார் ஸ்மிருதி ராணி. இதையடுத்து ரேபரேலி தொகுதியில் ராகுலை களமிறங்க செய்தது காங்கிரஸ்.

ஒருவேளை பிரியங்கா காந்தி தேர்தலில் நிறுத்தப்பட்டு இருந்தால் நேரு குடும்பத்தை சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் என்ற சூழல் உருவாகும். அப்போது இதைவைத்து பா.ஜ.க அரசியல் லாபம் தேடும். எனவேதான் பிரசாரத்தில் மட்டும் பிரியங்காவை காங்கிரஸ் களமிறங்கியது. இதனால்தான் அனைத்து இடங்களிலும் இதுவரையில் எந்த பிரச்னையும் இல்லாமல் சுமூகமாக தேர்தலை முடித்து இருக்கிறோம். இதேபோல் பிரதமரை அறிவிப்பதிலும் இரண்டு திட்டங்களை காங்கிரஸ் வைத்துள்ளது. அதாவது வெற்றிபெறும் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பட்சத்தில் பிரதமராக கார்கே முன்னிறுத்தப்படுவார். அவர் ஒரு தலித் தலைவர் என்பதாலும், மூத்த தலைவர் என்பதாலும் கூட்டணியில் இருக்கும் அனைவரும் ஏற்றுக்கொளவர்கள். போட்டியிடும் தொகுதிகளில் 80% மேல் வெற்றிபெறும் பட்சத்தில் ராகுல் காந்தியை அறிவிப்போம். இதற்கு காங்கிரஸ் தொண்டர்கள் ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும் என நினைப்பதுதான் காரணம்” என்றனர்.

கார்கே, ராகுல் காந்தி

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், “இந்தமுறை காங்கிரஸ் 328 இடங்களில் போட்டியிடுகிறது. அதில் 150 இடங்களுக்கு மேல் வெற்றிபெற்றால்தான் காங்கிரஸூக்குதான் பிரதமர் நாற்காலி கிடைக்க வாய்ப்பு கிடைக்கும். இல்லையென்றால் மாநில கட்சிகள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரை பிரதமராக ஏற்றுக்கொள்ளவார்களா என்பதில் சந்தேகம் இருக்கிறது. ஆனால் 150 இடங்களை பிடிக்கும் அளவுக்கு காங்கிரஸ் கடுமையாக உழைக்கவில்லை என்று தான் தெரிகிறது. காங்கிரஸ் தலைவர்களே 120 இடங்களை தொடலாம் என்கிற மனநிலையில்தான் இருக்கிறார்கள். காங்கிரஸ் 150 இடங்களுக்கு மேல் வெற்றிபெற்று, 300-க்கும் அதிகமான இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெரும்போது மறுபக்கம் பாஜக 190 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சிகள் எல்லாம் சேர்ந்து 210 இடங்களில் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள் என்றால் காங்கிரஸூக்கு அந்த வாய்ப்பு செல்லும்.

அப்போது கார்கேவை பிரதமராக இந்தியா கூட்டணி அறிவிக்கும். இதற்கு தலித் தலைவர் என்கிற முறையில் அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ளும். இந்த கேம் தான் காங்கிரஸ் ஆடும். ஆனால் இறுதி முடிவு 5-ம் தேதிதான் தெரியும். இல்லையென்றால் பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்கும். வாரணாசியில் தேர்தல் நடக்கும் சூழலில் மோடி இங்குவந்து தியானத்தில் உட்கார்ந்து இருக்கிறார். இதன் மூலம் எந்த அளவுக்கு பயத்தில் இருக்கிறார் என்பதை காட்டுகிறது. அதேநேரத்தில் 400 இடங்களில் வெற்றிபெறுவோம் என்கிறார்கள். ஆனால் 200 இடங்கள்தான் அவர்களுக்கு கிடைக்கும்.

குபேந்திரன்

அப்போது கூட்டணி ஆட்சிதான் அமையம். அந்த நேரத்தில் பிரதமராக மோடி இருக்க வாய்ப்புகள் குறைவு. இதற்கு பா.ஜ.கவுக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருப்பதுதான் காரணம். அவ்வாறு மாற்று கருத்து இருப்போர், குறைந்துள்ள வாக்கு எண்ணிக்கையை காரணமாக காட்டி வேறு ஒருவரை பிரதமராக கொண்டு வருவார்கள். ஆர்எஸ்எஸ் பிரகலாத் ஜோஷியை பிரதமராக்க துடிக்கிறது. என்ன நடக்கிறது என்பது ஜூன் 5-ம் தேதி தெரிந்துவிடும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *