புதுச்சேரி பா.ஜ.க தலைவராக இருந்த சாமிநாதனை நீக்கிவிட்டு, தங்கள் கட்சியின் ராஜ்ய சபா எம்.பி-யான செல்வகணபதியை தலைவராக அறிவித்தது அக்கட்சித் தலைமை. தலைவராக அவர் பதவியேற்றது முதல், கட்சியின் சீனியர்களை ஓரம் கட்டுவதுடன், அவர்களின் பதவிகளை பறித்து தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு கொடுக்கிறார் என்று குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இந்த நிலையில்தான் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பா.ஜ.க-வைச் சேர்ந்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிட்டார். ஆனால் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் ஆளும் கட்சி அமைச்சராகவே களமிறங்கிய நமச்சிவாயம், காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திடம் 1,36,516 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
மாநிலம் முழுவதும் நிலவும் போதை கலாசாரம், மாணவர்களிடையே கஞ்சா புழக்கம், மின்சாரத்துறை தனியார்மயமாக்கும் முயற்சி, மாநில அந்தஸ்து வழங்காதது என ஆளும் கட்சி மீதான அதிருப்திகளே பா.ஜ.க தோல்விக்கு காரணம் என்றனர் அரசியல் பார்வையாளர்கள். அதேசமயம், பா.ஜ.க-வின் முன்னாள் தலைவரான சாமிநாதன், `புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க-வுக்கு அமைப்பு ரீதியாக உறுப்பினர் சேர்க்கை நடத்தி, கிளை, தொகுதி, மாவட்ட மற்றும் மாநிலத்தில் அனைவரின் ஒருமித்த கருத்தோடு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். பொறுப்பேற்ற அனைவரும் திறமையாக செயல்பட்டதால், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு 6 சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அதனால் கூட்டணி ஆட்சியிலும் பாரதிய ஜனதா கட்சி பங்கு பெற்றது.
இந்த நிலையில் எந்த ஒரு அனுபவமும் இல்லாமல் திடீரென்று கட்சிக்கு தலைமைப் பொறுப்பேற்ற தற்போதைய தலைவர் செல்வகணபதி அவர்கள், கட்சியில் காலம் காலமாக சித்தாந்த ரீதியில் பணியாற்றிய நிர்வாகிகளை நீக்கினார். கிளை, கேந்திரத்தை கலைத்துவிட்டு, சுயநலத்துடன் தன்னுடைய சொந்த நிறுவனம் போல கட்சியை தவறாக வழிநடத்தி வருகிறார். ஆளும் கட்சியின் அமைச்சராக இருக்கும் ஒருவர் முதல் முறையாக தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். இதற்கு தற்போதைய தலைவர் செல்வகணபதியும், அவரது மோசமான நிர்வாகத் திறமையும்தான் காரணம். எனவே இந்த தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று, மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்று காரசாரமாக வெளியிட்டிருந்த அறிக்கை கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில்தான், புதுச்சேரி பா.ஜ.க-வின் மாநிலச் செயலாளரான ரத்தினவேல், கட்சி அலுவலகத்துக்குள் அரை நிர்வாணத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். மேல் சட்டையை கழற்றிவிட்டு அங்கிருந்த பாரதமாதா சிலை அருகில் அமர்ந்து கொண்ட அவர், `பா.ஜ.க தலைவர் செல்வகணபதியை உடனே மாற்ற வேண்டும்’ என்று கோஷம் எழுப்பி தர்ணா செய்தார். அதனால் பா.ஜ.க தலைவர் செல்வகணபதி தரப்பினருக்கும், ரத்தினவேல் தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. அதையடுத்து அங்கு விரைந்த சபாநாயகர் செல்வம் மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ரத்தினவேலுவை சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர். தேர்தல் தோல்வி காரணமாக தமிழக பா.ஜ.க-வைப் போல புதுச்சேரியிலும், கோஷ்டி மோதல் ஏற்பட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb