கேரளாவில் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழைப்புகளைக் குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை, அந்த மாநில போக்குவரத்துத்துறை கண்டிப்புடன் பின்பற்றி வருகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது அங்கு கட்டாயமாகும்.
குறிப்பாக, இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணிப்பவரும் ஹெல்மெட் அணிவது கேரளாவில் ஏற்கெனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு எரிபொருள் தரக்கூடாது என்ற கண்டிப்பெல்லாம் சில பகுதிகளில் அமலில் உள்ளது.
இந்நிலையில், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மற்றொரு கண்டிப்பான உத்தரவை கேரள சாலை போக்குவரத்துத்துறை பிறப்பித்துள்ளதாக, உள்ளூர் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி, இனி இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது, வாகனத்தை ஓட்டிச் செல்லும் நபர், பின்னால் இருப்பவருடன் பேசிக்கொண்டே செல்லக் கூடாது.
இருசக்கர வாகனத்தை பேசிக்கொண்டே இயக்குவது என்பது இனி கேரளாவில் தண்டனைக்குரிய குற்றமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கும் கேரள சாலை போக்குவரத்துத்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளதாகக் கூறப்படுகிறது.
எனினும், இந்த விதிமீறலுக்கு எத்தகைய தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை.
பேசிக்கொண்டே இரு சக்கர வாகனத்தை இயக்கினால் கவனச் சிதறல் ஏற்பட்டு விபத்துக்கு வழிவகுக்கும்; எனவே, அதைத் தடை செய்ய முடிவெடுத்துள்ளதாக மட்டும் போக்குவரத்துத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம், புதிய உத்தரவை எப்படி அமல்படுத்துவது என்ற குழப்பத்தில் போக்குவரத்து காவல்துறையினர் உள்ளதாகவும் கேரள ஊடகத்தின் செய்தி சுட்டிக்காட்டுகிறது.
“இதென்ன அநியாயம்? டூவீலருக்கு மட்டும் இப்படி கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். 4 வீலருக்கு கிடையாதா..? 4 வீலரையும் நன்றாக செக் பண்ணுங்கள்” என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நம்மூரில் இந்த உத்தரவு வந்தால் எப்படி இருக்கும்? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கமென்ட்டில் சொல்லுங்கள்…