வேலூரில் நேற்று இரவு, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசும்போது, “வரும் 13-ம் தேதி பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழு கூடுகிறது. அதன் பிறகு விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் குறித்த எங்களின் முடிவை தெரியப்படுத்துகிறோம். `நீட்’ தேர்வு இந்தியாவுக்கே தேவை கிடையாது. அந்தத் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது. கிராமப்புற மாணவர்கள், ஏழை மக்களுக்கும் எதிரானது. பல குளறுபடிகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. ஆகையால், நீட் தேர்வை இந்தியாவில் ரத்து செய்ய வேண்டும் அல்லது குறைந்தபட்சம் தமிழகத்திலாவது ரத்து செய்ய வேண்டும்.
மதுரையில் நிச்சயமாக `எய்ம்ஸ்’ மருத்துவமனை வர வேண்டும். கண்டிப்பாக வரும். `நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பாரத பிரதமராக வரவேண்டும்’ என்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் நோக்கம். வந்துவிட்டார். வெற்றி பெற்றுவிட்டார். நிச்சயமாக, இந்தியாவில் நல்லாட்சி நடக்கும். உலகின் மூன்றாவது பொருளாதாரத்துக்கு இந்தியாவை கொண்டுச் செல்வார் நரேந்திர மோடி. அதேபோல, சமூகநீதி பிரச்னைகள் இருக்கின்றன. நாங்கள் வலியுறுத்தி, அதற்கு தீர்வு காண்போம்.
காவிரி என்பது தமிழ்நாட்டின் உயிர்நாடி பிரச்னை. 50 லட்சம் விவசாயிகள், 22 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் காவிரி நீரால் பயன்பெறுகிறார்கள். இதில் எந்த தடையும் இருக்கக்கூடாது. தொடர்ச்சியாக, இரு மாநிலங்களும் சுமூகமான உறவை வைத்துக்கொண்டு பிரச்னைகளுக்கு தீர்வு கண்டறிய வேண்டும். அங்கே ஆண்டுகொண்டிருப்பது காங்கிரஸ் ஆட்சிதான். இங்கே தி.மு.க கூட்டணி ஆட்சி நடக்கிறது.
போதைப்பொருள்களை ஒழிப்பதில் முன்னுரிமை கொடுப்பதாகச் சொல்லும் முதலமைச்சரிடம், அதற்கான செயல்பாடுகளை பார்க்க முடியவில்லை. `மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்களை அழைத்து கூட்டம் நடத்தி, போதைப் பொருள்களுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று முதலமைச்சரிடம் 3 ஆண்டுகளுக்கு முன்பு `முதல்’ சந்திப்பிலேயே சொல்லியிருந்தேன்.
ஆனால், எந்த நடவடிக்கையும் கிடையாது. பெயருக்கு `கஞ்சா 1.0, 2.0, 3.0’ என்று மூன்றாயிரம், நான்காயிரம் பேரை கைது செய்கிறார்கள். 15 நாள்களில் அவர்கள் வெளியே வந்துவிடுகிறார்கள். போதைப் பொருள்கள் எங்கே இருந்து வருகிறது, யார் விற்பனைச் செய்கிறார்கள்? அவர்களை பிடித்ததே கிடையாது. தெருவில் விற்பவர்களைத்தான் பிடிக்கிறார்கள். மது மிகப்பெரிய பிரச்னை. அதைவிட பலமடங்கு பிரச்னையை ஏற்படுத்தியிருப்பது போதைப் பொருள்கள்தான். போதைப்பொருள் விவகாரத்தில் முதலமைச்சர் கவனம் செலுத்துவதுபோல எனக்குத் தெரியவில்லை’’ என்றார். இந்த செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் எம்.எல்.ஏ-வும், மாவட்டச் செயலாளருமான கே.எல்.இளவழகன் உட்பட பா.ம.க நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88