மகப்பேறு காலத்தில் தாய்-சேய் நலன் காக்கவும், பிரசவத்தின்போது இறப்புகளைத் தடுக்கவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, கர்ப்பிணிப் பெண்களுக்குப் பேறுகால ஊட்டச்சத்து பெட்டகம், தாய்-சேய் நலப் பெட்டகம், பிரசவக் கால முன்-பின் கவனிப்புகள், கர்ப்பிணிப் பெண்கள் நலன் காக்க உதவித்தொகை, தாய்-சேய் நலப் பிரசவத்தினை நினைவூட்டும் புகைப்படப் பரிசு எனப் பல்வேறு நடவடிக்கைகளைச் சுகாதாரத்துறை மூலமாகத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில், ஒரு சில எதிர்பாரா சமயங்களில் பிரசவத்தின்போது நிகழும் தாய் அல்லது சிசு இறப்பு சம்பவங்கள் பாதுகாப்பான பிரசவத்தினைக் கேள்விக்குள்ளாக்கிவிடுகிறது. இந்நிலையில் கடந்த ஓராண்டில், விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் மகப்பேறு சிகிச்சையில் இறப்பு எதுவும் இல்லை எனும் சாதனை தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த மருத்துவ பணியாளர்களும் மெச்சிக்கொள்ளும் அம்சமாக மாறியிருக்கிறது.
இதுதொடர்பாக விருதுநகர் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களிடம் பேசினோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “தமிழ்நாட்டில் மகப்பேறுவின்போது ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாகக் குறைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு சுகாதாரத்துறை மாவட்ட வாரியாகவும் மகப்பேறு சிகிச்சை கால இறப்பு விகிதங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அந்தவகையில், விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் மகப்பேறு இறப்பு எதுவும் இல்லை என்ற பாதையை உருவாக்கி மருத்துவ பணியாளர்கள் புது சாதனை படைத்துள்ளனர். விருதுநகர் வருவாய் மாவட்டத்தில், சுகாதார அமைப்புகளின் அடிப்படையில் விருதுநகர் சுகாதார மாவட்டம், சிவகாசி சுகாதார மாவட்டம் என இரண்டு சுகாதார மாவட்டங்கள் உள்ளன.