மகளிர் உரிமைத்தொகை;கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த பெண்கள் – தீயாய் பரவிய வதந்தியால் ஏமாற்றம்!

தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றத்தை கருத்தில்கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் சிறப்புத்திட்ட செயலாக்கத்துறையின் சார்பில் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 6 கோடிக்கும் அதிகமான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். பெண்களின்‌ வங்கி கணக்கில் மாதம் ஆயிரம் ரூபாய் நேரடியாக வரவு வைக்கப்படுவதால் இத்திட்டம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும் உரிமைத்தொகை கிடைக்கப்பெறாதவர்கள், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் சேர முடியாதவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படும் என தமிழக அரசு ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டிருந்தது.

விருதுநகர்

இந்த நிலையில், `தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள், அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். 17,18, மற்றும் 19 ஆகிய மூன்று தேதிகள் நடக்கும் இந்த முகாமில், மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப்பெறாத பெண்கள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து மாவட்ட அதிகாரியிடம் வழங்கலாம்’ என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது வைரலானதை தொடர்ந்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பெண்கள் படையெடுத்து வந்தனர். மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்ப படிவங்களை நிரப்பி கொண்டு வந்திருந்த அவர்களை சந்தித்த மாவட்ட அதிகாரிகள், ‘மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிப்பது தொடர்பாக எந்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

பெண்கள்

இதுகுறித்து முறையான தகவல் செய்தித்தாள்கள் மற்றும் டி.வி. சேனல்கள் மூலமாக வெளியிடப்படும். வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை பற்றி பரவிய செய்தி தவறானது. யாரோ வீண் வதந்திகளை பரப்பிவிட்டுள்ளனர். ஆகவே வதந்திகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்’ என அறிவுரை கூறி பெண்களுக்கு எச்சரிக்கை விழிப்புணர்வூட்டி அனுப்பிவைத்தனர்.

இதேபோல தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் சேர்வதற்காக பெருந்திரளாக வந்திருந்த பெண்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதில் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த பெண்கள் பேசுகையில், “மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் சேருவதற்கு கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பம் எழுதிக் கொடுக்கலாம் என தகவல் சொன்னதன் பேரில் நாங்கள் இங்கு வந்தோம். நாங்கள் ஒவ்வொருவருமே விண்ணப்பத்தை பூர்த்தி செய்து எழுதி கொடுப்பதற்கு 50 ரூபாய் கூலி வழங்கியுள்ளோம்‌‌. ஆனால் தற்போது அதிகாரிகள் பேசுகையில், எங்களுக்கு கிடைத்த தகவல் வதந்தி என கூறுகிறார்கள். எங்களுக்கு வீண் அலைச்சலுடன் பணவிரயம் ஏற்பட்டது எங்களுக்கு மிச்சம்” என ஆதங்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *