மகாராஷ்டிராவில் 4 சட்டமேலவை உறுப்பினர் பதவிகளுக்கு வரும் 26-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மும்பை பட்டதாரிகள் தொகுதி, ஆசிரியர் தொகுதி, நாசிக் ஆசிரியர் தொகுதி, கொங்கன் பட்டதாரிகள் தொகுதிக்கு நடைபெறும் தேர்தலில் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. சிவசேனா (உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரே தன்னிச்சையாக நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவித்துவிட்டு, வெளிநாடு சென்றுவிட்டார். தங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் வேட்பாளரை அறிவித்துவிட்டதாக மாநில காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலே குற்றம்சாட்டி இருந்தார். இதையடுத்து காங்கிரஸ் தலைமை சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து கொங்கன் பட்டதாரிகள் தொகுதியில் தாக்கல் செய்த வேட்பாளரை திரும்பப் பெற்றுக்கொள்வதாக உத்தவ் தாக்கரே அறிவித்தார். இதையடுத்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா(உத்தவ்)வை உள்ளடக்கிய மகாவிகாஷ் அகாடி தேர்தலில் இணைந்து போட்டியிடுகிறது.
அதேசமயம் பா.ஜ.க தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு ஏற்படாததால், பா.ஜ.க, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்), சிவசேனா (ஷிண்டே) கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. கொங்கன் தொகுதியில் மட்டும் காங்கிரஸ் கட்சியின் ரமேஷ் கீர் மற்றும் பா.ஜ.க-வின் நிரஞ்சன் தேவ்காரே இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இத்தொகுதியில் நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே வேட்பாளரை அறிவித்து இருந்தார். ஆனால் தேவேந்திர பட்னாவிஸ் கேட்டுக்கொண்டதால் தனது கட்சி வேட்பாளரை ராஜ் தாக்கரே திரும்பப் பெற்றுக்கொண்டார். நாசிக் தொகுதியில் இரு சிவசேனாக்கள் மற்றும் பா.ஜ.க இடையே இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
மும்பை ஆசிரியர் தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்), பா.ஜ.க மற்றும் சிவசேனா (உத்தவ்) இடையே போட்டி நிலவுகிறது. மும்பை பட்டதாரிகள் தொகுதியில் பா.ஜ.க மற்றும் இரு சிவசேனாக்கள் மோதுகின்றன. இது தவிர மும்பை ஆசிரியர் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் சிவாஜி ஷெங்டேவிற்கு ஆதரவு கொடுக்கப்போவதாக சிவசேனா (ஷிண்டே) தெரிவித்துள்ளது.
மும்பை பட்டதாரிகள் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் கிரண் ஷெலாரை வெற்றிபெறச் செய்ய தேவையான பணிகளை விரைந்து செய்யும்படி துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே மக்களவை தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கடைசி வரை இழுத்தடித்தது. இதனால் வேட்பாளர் அறிவிப்பிலும் தாமதம் ஏற்பட்டது. இது தேர்தலிலும் பிரதிபலித்தது. தற்போது சட்டமேலவை தேர்தலிலும் அது போன்ற ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb