மகாராஷ்டிரா: சீட் மறுத்த காங்., கூட்டணி; சுயேச்சையாக போட்டியிட்டு வெல்லும் முன்னாள் முதல்வர் பேரன்!

மஹாராஷ்டிராவில் காங்கிரஸ் கோட்டையாக இருந்த சங்லி தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கிய விரக்தியில், காங்கிரஸிலிருந்து விலகி சுயேச்சையாகப் போட்டியிட்ட முன்னாள் முதல்வரின் பேரன் விஷால் பிரகாஷ் பாபு பாட்டீல் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

மகாராஷ்டிரா – விஷால் பிரகாஷ் பாபு பாட்டீல்

நடந்துகொண்டிருக்கும் வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, மகாராஷ்டிராவைப் பொறுத்தவரையில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் சுமார் 28 தொகுதிகளில் இந்தியா கூட்டணியின் அங்கமான மகாவிகாஷ் அகாடி முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா உள்ளிட்ட மூன்று கட்சிகளும் சேர்ந்து பா.ஜ.கவுக்கு எதிராகக் களம் கண்டன. இந்த நிலையில், மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கோட்டையாக இருந்த சங்லி தொகுதியை, கூட்டணி தொகுதி உடன்பாடின்போது உத்தவ் தாக்கரேவின் சிவசேனா எடுத்துக்கொண்டது. ஆனால், இந்த சங்லி தொகுதியானது பல தசாப்தங்களாக காங்கிரஸ் வென்றுவரும் தொகுதியாக இருந்து வந்தது.

குறிப்பாக, மகாராஷ்டிரா காங்கிரஸ் முன்னாள் முதல்வர் வசந்தா பாட்டீலின் மகன் பிரகாஷ்பாபு பாட்டீல் ஐந்துமுறை எம்.பி-யாக வெற்றிபெற்றிருக்கிறார். பிரகாஷ்பாபு பாட்டீலின் மரணத்துக்குப் பிறகு அவரின் சகோதரர் பிரதிக் பாட்டீல் இரண்டு முறை போட்டியிட்டு வென்றிருக்கிறார். இந்த நிலையில், தற்போதைய 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங் முன்னாள் முதல்வர் வசந்ததாதா பாட்டீலின் பேரனான விஷால் பிரகாஷ் பாபு பாட்டீல் சங்லி தொகுதியில் போட்டியிடும் திட்டத்தில் இருந்துவந்தார். ஆனால், கூட்டணி உடன்பாட்டில் அவரது கனவில் மண்ணை அள்ளிப்போட்டது உத்தவ் தாக்கரேவின் சிவசேனா. இதையடுத்து, சங்லி தொகுதியின் காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி காங்கிரஸ் தலைமையிடம் சங்லி தொகுதியை விஷ்ணுவுக்கு தரவேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தது. ஆயினும் எந்த பலனும் கிடைக்காத நிலையில், விஷ்ணு பிரகாஷ் பாபு பாட்டீல் காங்கிரஸிலிருந்து விலகி, சங்லி தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டார்.

விஷால் பிரகாஷ் பாபு பாட்டீல்

இந்தநிலையில், வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்றுவரும் நிலையில், பா.ஜ.க வேட்பாளர் சஞ்சய் பாட்டீல், உத்தவ் தாக்கரே சிவசேனாவின் வேட்பாளர் சந்திரஹார் சுபாஷ் பாட்டீல் உள்ளிட்ட மற்ற வேட்பாளர்களைவிடவும் சுமார் 1,00,259 வாக்குகள் அதிகம் பெற்று விஷ்ணு பிரகாஷ்பாபு பாட்டீல் தொடர்ந்து முன்னிலையில் இருந்துவருகிறார். ஒட்டுமொத்தமாக, 5,69,651 வாக்குகளை தற்போதுவரை பெற்று ஆச்சர்யத்தையும், சக கட்சியினருக்கு அதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *