மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் பா.ஜ.க-விற்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. 28 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 9 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால் சிவசேனா (உத்தவ்) தலைமையிலான மகாவிகாஷ் அகாடி ஒரு சுயேச்சை உட்பட 31 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறது. வழக்கமாக மகாராஷ்டிராவில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை மகாராஷ்டிராவில் 5 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி மகாராஷ்டிராவில் 18 தொகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அவ்வாறு தீவிர பிரசாரம் செய்த 18 தொகுதிகளில் வெறும் 3 தொகுதிகளில் மட்டுமே பா.ஜ.க கூட்டணியால் வெற்றி பெற முடிந்தது. மற்ற அனைத்து கட்சிகளையும்விட பா.ஜ.க குறைந்த இடங்களில் வெற்றி பெற்றது. இது குறித்து மகாவிகாஷ் அகாடி தலைவர்கள் உத்தவ் தாக்கரே, சரத் பவார் மற்றும் காங்கிரஸ் கட்சியின் பிருத்விராஜ் சவான் ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தனர்.
இதில் பேசிய சரத் பவார், “மகாராஷ்டிராவில் மகாவிகாஷ் அகாடி வெற்றி பெறுவதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். பிரதமர் நரேந்திர மோடி 18 பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோ நடத்தினார். அவர் பொதுக்கூட்டம் மற்றும் ரோடுஷோ நடத்திய 18 தொகுதிகளில் 3 தொகுதிகளில் மட்டுமே பா.ஜ.க வெற்றி பெற்று இருக்கிறது. மக்களவைத் தேர்தலில் பிரசாரம் செய்தது போன்று சட்டமன்றத் தேர்தலிலும் பிரதமர் மோடி தீவிர பிரசாரம் செய்யவேண்டும். இதன் மூலம் மகாவிகாஷ் அகாடி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறும்” என்று கிண்டலாக பேசினார்.
இதில் பேசிய உத்தவ் தாக்கரே, “பிரதமர் மோடி ஒவ்வொருவரது வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவதாக `மோடியின் உத்தரவாதம்’ என்று பேசினார். ஆனால் அவரது வாக்குறுதி பொய்யாகிவிட்டது. நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க மக்கள் மகாவிகாஷ் அகாடிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். வரும் மக்களவைத் தேர்தலில் மகாவிகாஷ் அகாடி இணைந்து போட்டியிடும். நெருக்கடியான நேரத்தில் எங்களுடன் இருந்தவர்கள் தொடர்ந்து எங்களுடன் இருப்பார்கள். எங்களை விட்டுச் சென்ற துரோகிகளுக்கு மீண்டும் இடமில்லை. ராமர் கோயில் கட்டியது பா.ஜ.க-விற்கு உதவவில்லை. அயோத்தியில்கூட பா.ஜ.க தோல்வி அடைந்துவிட்டது” என்றார்.
இதில் பேசிய முன்னாள் முதல்வர் பிரித்விராஜ்சவான், “மகாவிகாஷ் அகாடியில் பெரியவர், சிறியவர் என்று யாரும் கிடையாது. வெற்றி பெறக்கூடியவர் யார் என்பது குறித்து ஆய்வு செய்து அதன் அடிப்படையில் தொகுதிகள் ஒதுக்கப்படும். தொகுதிப் பங்கீடு குறித்து ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்துவிட்டோம்” என்றார். புனே மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் 6 தொகுதிகள் தங்களுக்கு வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.