ஆனால், அனுராக் தாக்கூரின் அந்தப் பேச்சை பிரதமர் மோடி பாராட்டியிருக்கிறார். பிரதமர் மோடி தன் சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஆற்றல் மிக்க என் இளம் நண்பரான அனுராக் தாக்கூரின் பேச்சை அவசியம் கேட்க வேண்டும். அற்புதமான முறையில் நையாண்டியுடன் உண்மையைக் கலந்து, ‘இந்தியா’ கூட்டணியின் கறைபடிந்த அரசியலை அம்பலப்படுத்தியிருக்கிறார்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
பாஜக எம்பி அனுராக் தாக்குரின் உரையை பகிர்ந்ததற்காக பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளது காங்கிரஸ். பஞ்சாப் முன்னாள் முதல்வரும், எம்.பியுமான சரண்ஜித் சிங் சன்னி, இது தொடர்பான நோட்டீஸை மக்களவைச் செயலாளரிடம் அளித்துள்ளார். அவர் தனது நோட்டீஸில், “மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக மக்களவையில் பாஜக எம்.பி கூறிய பல ஆட்சேபகரமான கருத்துகள்’ மக்களவைத் தலைவரால் பதிவுகளிலிருந்து நீக்கப்பட்டன. நீக்கப்பட்ட பகுதிகள் அடங்கிய முழு வீடியோவின் லிங்க்கை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது அதிர்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
சாதி குறித்த அனுராக் தாக்கூரின் பேச்சை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்திருக்கிறார். அவர் தனது சமூகவலைத்தளப் பக்கத்தில், ‘சாதி தெரியாதவர்கள் கணக்கெடுப்பு பற்றி பேசுவதாக நாடாளுமன்றத்தில் கூறப்பட்டது. சமூக, பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது இந்த நாட்டின் 80 சதவிகித மக்களின் கோரிக்கை. இப்போது நாட்டின் 80 சதவிகித மக்களும் நாடாளுமன்றத்தில் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். இது, பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவின் பேரில் நடந்ததா என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்’ என்று பதிவிட்டிருக்கிறார்.