நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. 2014, 2019 ஆகிய தேர்தல்களில் பெற்றதைப்போல பா.ஜ.க இந்த முறை தனிப்பெரும்பான்மை பெற முடியாததால், பிரதமரின் கேபினெட்டில் எப்போதும் இல்லாத அளவுக்கு ஐந்து கூட்டணிக் கட்சிகளுக்கு கேபினட் அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டிருக்கிறது. மறுபுறம், தோல்வியடைந்தாலும் 230-க்கும் மேற்பட்ட இடங்களுடன் மக்களவையில் பா.ஜ.க-வுக்கு எதிர்வரிசையில் வலுவாக அமர்வதால் இந்தியா கூட்டணி சற்று மகிழ்ச்சியுடன் இருக்கிறது.
இந்த மகிழ்ச்சிக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அதுதான், பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயக கூட்டணி அரசைக் காப்பாற்றிக்கொண்டிருக்கும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி (16 எம்.பி-க்கள்) மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (12 எம்.பி-க்கள்) கட்சியின் ஆதரவு. இந்த இரு கட்சிகளுக்கும் எப்படியும் கூடுதல் கேபினட் அமைச்சர் பதவிகள் பா.ஜ.க கொடுக்கக்கூடும் எனும் பேச்சுகள் எழுந்தாலும், இரண்டு கட்சிகளுக்கும் தலா ஒரு கேபினட் மற்றும் தலா ஒரு மத்திய இணையமைச்சர் பதவியும்தான் கொடுக்கப்பட்டது.