நீலகிரியில் வனங்களையும் வாழிடங்களையும் இழந்து தவிக்கும் வனவிலங்குகள், உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளில் உலவி வருகின்றன. அதிலும் குறிப்பாக யானை, கரடி, காட்டு மாடு போன்ற வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் காணப்படுவது இயல்பான ஒன்றாக மாறி வருகிறது. யானை மற்றும் கரடிகளுக்கு குடியிருப்பு பகுதிகளில் உணவு கிடைக்காத சூழலில் அந்தப் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள், சத்துணவு கூடங்கள் போன்றவற்றை உடைத்து சேதப்படுத்தி உள்ளே நுழைகின்றன.
உள்ளே வைக்கப்பட்டிருக்கும் அரிசி, கோதுமை, ராகி, பாமாயில் போன்றவற்றை உண்டுச் செல்கின்றன. குன்னூர், கோத்தகிரி, கூடலூர், மசினகுடி போன்ற பல பகுதிகளிலும் இது போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. இவற்றை உண்பதால் வனவிலங்குகளுக்கும் உடல்நல பாதிப்பு ஏற்படுவதுடன் மக்களுக்குத் தேவையான குடிமை பொருள்களை இருப்பு வைப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.