“மாநகராட்சி நிலைக்குழு கவுன்சிலர்களின் சட்ட விரோத செயல்களால், மதுரை மாநகராட்சிக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது…” என்று பாஜக வழக்கறிஞர், கலெக்டரிடம் கொடுத்த புகார், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் முத்துக்குமார், மதுரை கலெக்டரிடம் புகார் மனு ஒன்று அளித்திருக்கிறார். அதில், “மதுரை மாநகராட்சியில் கட்டடம் கட்டுவதற்கு கட்டட உரிமையாளர்கள் விண்ணப்பிக்கும்போது மாநகராட்சி விதிகளுக்கு உட்பட்டு, குறிப்பிட்ட சதுர அடி அளவுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. அதற்கு மேல் கட்டடம் கட்ட சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்தான் அனுமதி அளிக்கவேண்டும். மேலும், உள்ளூர் திட்ட குழுமத்திலும் அனுமதி பெற வேண்டும்.
ஆனால், இத்தகைய கட்டட வரைபட அனுமதி விஷயத்தில், “மதுரை மாநகராட்சி நகரமைப்பு மற்றும் அபிவிருத்தி நிலைக்குழு’ என்ற பெயரில் மாநகராட்சி கவுன்சிலர்கள் தலையிட்டு விதிமுறைகளை மீறி, வரைபட அனுமதியை மீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு தொடர்ந்து அனுமதி அளிப்பதால் மதுரை மாநகரம் ஆபத்தான, அபாயகரமான நகரமாக மாறி வருகிறது. மாநகராட்சிக்கு அதிகமான வருவாய் இழப்பும் ஏற்படுகிறது.