வங்கிச் சேவை குறைபாடு தொடர்பாக சிவகாசியை சேர்ந்த பெண் ஒருவர் தாக்கல் செய்திருந்த வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு வங்கி நிர்வாகம் 25 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து நீதிமன்ற அலுவலர்களிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்துள்ள தேவர்குளத்தை சேர்ந்தவர் ஜனனி. குடும்பப் பிரச்னை காரணமாக சிவகாசி ஜூடிசியல் மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றம்-1ல் கணவருக்கு எதிராக பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் ஜனனி வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு கணவன் – மனைவி இருவரும் ஆஜராகி ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் அளித்திருக்கின்றனர்.
இதில், சென்னை ஸ்டாண்டர்டு சேர்ட்டர்டு வங்கியில் ஜனனியின் பெயரிலான கணக்கு விவரம் மற்றும் பண பரிவர்த்தனைகளை ஜனனிக்கு எதிரான ஆதாரமாக அவரின் கணவர் கோர்ட்டில் சமர்ப்பித்திருக்கிறார்.
கணவருக்கு எதிரான வழக்கில், தன்னுடைய வங்கிக் கணக்கு விவரம் மற்றும் பணபரிவர்த்தனை விவரங்களை தனது சம்மதம் இல்லாமல் வங்கி நிர்வாகம் வழங்கியிருப்பது அறிந்து மன உளைச்சல் அடைந்த ஜனனி, இது தொடர்பாக விளக்கம் கேட்டு வங்கி நிர்வாகத்திற்கு கடந்த பிப்ரவரி மாதம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஆனால் அதற்கு எந்த முறையான பதிலும் வங்கி நிர்வாகம் அளிக்கவில்லை. இதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் ஸ்டாண்டர்டு சேர்ட்டர்டு வங்கி சேவைக் குறைபாடு தொடர்பாக ஜனனி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் அடிப்படையில் விசாரணை நடத்திய நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி சக்கரவர்த்தி, “வாடிக்கையாளரின் சம்மதம் இல்லாமல் அவர் பற்றிய சுய விவரங்கள், வங்கிக் கணக்கு விவரம், பணப் பரிவர்த்தனைகள் ஆகியவற்றைப் பிறருக்கு பகிர்ந்தது வங்கிச் சேவை குறைபாட்டைச் சுட்டிக்காட்டி, இந்த நடவடிக்கை வங்கி மீதான நம்பகத்தன்மை இழக்க செய்திருப்பதாக கருதி பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் மற்றும் மன உளைச்சலுக்கு ரூ.20 ஆயிரம், வழக்கு செலவுத் தொகையாக ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை சேர்த்து மொத்தம் 25 ஆயிரம் ரூபாயை வங்கி நிர்வாகம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என நீதிபதி சக்கரவர்த்தி உத்தரவிட்டார்” என கூறினர்.