திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்திலுள்ள மாஞ்சோலை பகுதியில் தேயிலை தோட்டங்கள் உள்ளன. இந்த தேயிலை தோட்டத்தை தி பாம்பே பர்மா டிரேடிங்க் கார்ப்பிரேஷன் நிறுவனம் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்திருந்தது. அதனால், இந்த தேயிலை தோட்டத்தின் விவசாயப் பணிகளுக்காக திருநெல்வேலி, தென்காசிம் தூத்துக்குடி, கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கூலித் தொழிலாளர்கள் பணிக்காக வந்து வேலை செய்யத் தொடங்கினர்.

அதன் தொடச்சியாக கடந்த 5 தலைமுறையாக மக்கள் அங்கு வசித்து, வேலை செய்தும் வந்தனர். இந்த நிலையில், குத்தகை காலம் முடிவடைவதால், தேயிலை தோட்டங்களை மூடுவதுடன் அங்கு வசித்து வரும் மக்களை, அந்தப் பகுதியிலிருந்து வெளியேற்ற தனியார் நிறுவனம் திட்டமிட்டு, ஜுன் 14-ம் தேதிக்கும் அனைத்து தொழிலாளர்களும் வெளியேற வேண்டும் என கூறியுள்ளது. இது தொடர்பாக மாஞ்சோலையைச் சேர்ந்த அமுதா என்றப் பெண் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் பொதுநல மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “நான்கு தலைமுறைகளாக மாஞ்சோலை பகுதியில் 700 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த தேயிலை தோட்டத்திற்கான குத்தகை காலம் 2028-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது. ஆனால் குத்தகை காலம் நிறைவடைவதற்கு முன்பாகவே பி.பி.டி.சி என்ற தனியார் நிறுவனம், தேயிலை தோட்ட தொழிலாளர்களை ஆகஸ்ட் 7-ம் தேதிக்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நான்கு தலைமுறைகளாக இதே பகுதியில் வசித்து வரும் சூழலில், தற்போது வெளியேற சொல்வதால் செய்வதறியாது தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.

எனவே மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடு வசதி போன்றவற்றை செய்து தர வேண்டும். தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கன்னியாகுமரி அரசு ரப்பர் தோட்டக்கழகம், களக்காடு முண்டந்துறை சரணாலய பகுதிகள், அங்கன்வாடிகள் போன்றவைகளில் பணி வழங்க வேண்டும். மேலும் மறுவாழ்வு ஏற்படுத்தும் வகையில், மறுப்பணி வாய்ப்பு வழங்கும் வரை ஒரு குடும்பத்தினருக்கு மாதம் ரூ.10,000 வழங்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, மறுவாழ்வு வசதிகளை செய்து தரும் வரை அங்கிருந்து, அவர்களை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. மத்திய, மாநில அரசு தரப்பில் வெள்ளிக்கிழமை உரிய விளக்கம் அளிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டு, இந்த வழக்கு விசாரணையை ஜூன் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்திருக்கின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88