மிஸ்டர் கழுகு: யாகம் வளர்த்த அன்புமணி | முறைத்துக்கொண்ட அதிமுக மாஜி |`மினிஸ்டரும் மா.செ-வும் ஒண்ணா?'

நெல்லை, கோவை மாநகராட்சிகளின் மேயர் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது என்றாலும், அவை நடந்து முடிந்தவிதத்தில் தலைமைக்குக் கடும் அதிருப்தியாம். அதுவும் நெல்லையில், தலைமை அறிவித்த வேட்பாளரை எதிர்த்து ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்ததோடு, அவருக்கு 23 வாக்குகளும் கிடைத்ததைத் தலைமையால் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லையாம். இதையடுத்து, பொறுப்பு அமைச்சர்களான கே.என்.நேரு, தங்கம் தென்னரசுவை அழைத்துக் கடிந்துகொண்ட தலைமை, மாற்று வேட்பாளருக்கு எந்தெந்த கவுன்சிலர்கள் வாக்களித்தார்கள் என்ற லிஸ்ட்டை விசாரித்து, அறிக்கை ஒன்றைத் தாக்கல்செய்ய உத்தரவிட்டிருக்கிறதாம்.

நெல்லை மேயர் தேர்தல்

நெல்லை மேயர் தேர்தலையடுத்து நடந்த கோவை மேயர் தேர்தலிலும், இதுபோல எந்த அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக, தலைமையிலிருந்து அன்பகம் கலையை அனுப்பிவைத்ததோடு, தேர்தல் முடியும் வரை அமைச்சர்கள் கே.என்.நேருவும் முத்துசாமியும் அங்கிருந்து கிளம்பக் கூடாது எனவும் உத்தரவிட்டிருக்கிறது தலைமை. கோவையில் எந்தப் பிரச்னையும் நடக்கவில்லையென்றாலும், கவுன்சிலர்கள் சிலர் அமைச்சர் நேருவிடம் சத்தம்போட்டுப் பொங்கிவிட்டார்கள். உள்ளாட்சித் தேர்தல் நெருங்கவிருக்கும் சூழலில், ‘இதையெல்லாம் எப்படிச் சமாளிப்பது?’ எனப் புலம்புகிறதாம் கட்சித் தலைமை!

நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க-வின் தோல்வி குறித்துத் தொகுதிவாரியான ஆலோசனைக் கூட்டம் எம்.ஜி.ஆர் மாளிகையில் நடந்துவருகிறது. அனைத்துத் தொகுதிகளுக்குமான ஆலோசனைக் கூட்டம் நடந்து முடிந்துவிட்டாலும், ஆகஸ்ட் 5-ம் தேதி நடக்கவிருந்த கரூர், புதுச்சேரி ஆகியவற்றுக்கான ஆலோசனைக் கூட்டம், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

‘கரூர் மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நில மோசடி வழக்கில் நிபந்தனை ஜாமீனில் இருப்பதால், அவரால் சென்னைக்கு வர முடியவில்லை’ என வெளியே சொல்லப்பட்டாலும், ‘கைது விவகாரத்தில், கட்சித் தலைமை தனக்கு சப்போர்ட் செய்யவில்லை என்ற கடுப்பில்தான் ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்திருக்கிறாராம் எம்.ஆர்.விஜயபாஸ்கர்’ என்கிறார்கள் நெருக்கப்புள்ளிகள். இந்த விவகாரம் தலைமையின் காதுகளை எட்ட, அவரைச் சமாதானம் செய்யும் முயற்சியில் சீனியர்களைத் தூது அனுப்பியிருக்கிறதாம் தலைமை. சமாதானப் படலம் முடிந்த பிறகே கரூர், புதுச்சேரி ஆகியவற்றுக்கான ஆலோசனைக் கூட்டத்துக்கான தேதி அறிவிக்கப்படுமாம்!

சத்தியமூர்த்தி பவனில் நாளுக்கு நாள் பிரச்னைகள் அதிகரித்துக்கொண்டேபோகின்றன. உச்சகட்டமாக ஆகஸ்ட் 5-ம் தேதி, கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சிவகங்கையிலிருந்து முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ ராமசாமி தலைமையில், 200-க்கும் மேற்பட்ட கதர் வேட்டிகள் வண்டிகட்டிக்கொண்டு வந்து தலைமையிடம் புகார் தெரிவித்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இந்த நிலையில், ‘சிவகங்கையில் மட்டுமல்ல… தமிழ்நாடு முழுவதுமே இதேபோலக் கட்சிக்குள் கோஷ்டி மோதல்கள் அதிகரித்துவருகின்றன.

காங்கிரஸ் கூட்டம்

கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் சில தலைவர்கள் பேசுகிறார்கள். இளைஞரணி, மகளிரணி, மாணவர் அமைப்பு, ஐ.டி விங் எனக் கட்சியின் துணை அமைப்புகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படாமல் இருப்பதும் பிரச்னைகளை உண்டாக்குகிறது’ என்றெல்லாம் சிக்கல்களைப் பட்டியலிட்டு டெல்லிக்கு ரிப்போர்ட் தட்டியிருக்கிறதாம் டெல்லிக்கு நெருக்கமான குழு ஒன்று. அதனடிப்படையில், ‘தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அமைப்பு மற்றும் நிர்வாகரீதியில் சில மாற்றங்களைச் செய்யும் முடிவுக்கு வந்திருக்கிறதாம் டெல்லி தலைமை’ என்கிறார்கள் கதர் சீனியர்கள்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், ஆடி அமாவாசை நாளில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் துலாபாரத்தில் பங்கேற்றிருக்கிறார். பின்னர் மூலவரை வழிபட்டவர், சூரசம்ஹார மூர்த்தி சந்நிதானத்திலும் பூஜை செய்திருக்கிறார். இதையடுத்து ‘எதிரிகளை வலுவிழக்கச் செய்து, நினைத்த காரியத்தில் வெற்றியைத் தேடித்தரும்’ என நம்பப்படும் ‘சத்ரு சம்ஹார யாகமும்’ செய்திருக்கிறார். இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த பூஜை, யாகம் குறித்து உடனிருந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்குகூடத் தகவல் தெரிவிக்கப்படவில்லையாம்.

அன்புமணி ராமதாஸ்

‘ஏன் இந்தத் திடீர் யாகம்?’ எனக் கேட்டால், “வரும் உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களைப் பிடிக்க வேண்டும் என்பதற்காகவே செய்யப்பட்டது. ஆடி அமாவாசை நாளில் இந்த யாகத்தைச் செய்தால், முழுப்பலனும் கிடைக்கும் என சின்ன அய்யாவின் ஆஸ்தான ஜோதிடர் சொன்னதையடுத்தே, இந்த யாகத்தை நடத்தி முடித்திருக்கிறார்” என்கிறார்கள். “யாகம் செய்தால் கட்சி வளர்ந்துவிடுமா… இது ஆட்டோ ஓடலைன்னு கண்ணாடியைத் திருப்பின கதையால்ல இருக்கு…” என நமுட்டுச் சிரிப்புச் சிரிக்கிறார்கள் பாட்டாளிச் சொந்தங்கள்!

சக அமைச்சர்கள் தொடங்கி, தொகுதி எம்.பி வரை எல்லோரிடமும் உரசிக்கொண்ட ராஜகண்ணப்பன் தரப்பு, இப்போது ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க செயலாளரிடம் நேரடியாகவே மோதியிருக்கிறது. பரமக்குடி அருகே பார்த்திபனூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சிக்கு அமைச்சர் சென்றபோது அவருக்கு இணையாக மா.செ காதர் பாட்சாவும் நடந்து செல்ல முற்பட, “கொஞ்சம் நின்னு வாங்க…” என அவரைத் தடுத்திருக்கிறது அமைச்சர் தரப்பு. “ஏன்?” என்று மா.செ தரப்பு எகிற, “மினிஸ்டரும், மா.செ-வும் ஒண்ணா?!” என்று கேட்டிருக்கிறார்கள் அமைச்சர் ஆதரவாளர்கள். “மாவட்ட நிகழ்ச்சிகளில் மாவட்டச் செயலாளருக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கணும்னு தெரியாதா?” என்று கேட்ட மா.செ தரப்பு ஒருமையிலும் பேசியதாகத் தெரிகிறது.

ராஜகண்ணப்பன்

இரு தரப்பும் தங்கள் முன்னிலையிலேயே மோதிக்கொண்டதை அமைச்சரோ மாவட்டச் செயலாளரோ கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்ததுதான் அங்கிருந்த கட்சி நிர்வாகிகளை முகம் சுழிக்க வைத்திருக்கிறது. ஒருவழியாக போலீஸார் இரு தரப்பையும் சமாதானம் செய்துவைத்தாலும் நிகழ்ச்சி முடியும் வரை அமைச்சரும் மா.செ-வும் ஒருவருக்கு ஒருவர் முகம் கொடுத்துக்கூடப் பேசிக்கொள்ளவில்லையாம். இந்தப் பிரச்னையை தலைமையும் வேடிக்கை பார்க்காமல், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குமுறுகிறார்கள் ராமநாதபுரம் தி.மு.க-வினர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *