கோவை மாநகராட்சி மேயராக இருந்த கல்பனா மீது ஏராளமான புகார்கள் எழுந்தன. இதையடுத்து அவரை மாற்ற திமுக தலைமை முடிவு செய்தது. கடந்த மாதம் கல்பனா மேயர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து கோவை மேயர் பதவி காலியானதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேயர் பதவியை கைப்பற்ற திமுக கவுன்சிலர்களிடையே கடும் போட்டி நிலவியது. கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், அமைச்சர்கள் நேரு, முத்துசாமி தலைமையில் திமுக கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு வரும் கவுன்சிலர்களை, ஒரு செட் துணி எடுத்து வரசொல்லி உத்தரவிட்டுள்ளனர்.
அசம்பாவிதம் இல்லாமல் மேயர் தேர்தலை முடிக்கும் விதமாக, கவுன்சிலர்களை தேர்தல் முடியும் வரை தங்களின் கன்ட்ரோலில் வைக்க முடிவு செய்தனர்.
மேயர் பதவிக்கு மண்டலத் தலைவர்கள் உட்பட பலர் தீவிரமாக போட்டியிட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் 29-வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரின் கணவர் ராமசந்திரன், 29-வது வார்டு திமுக செயலாளராக இருக்கிறார். இவர் தேர்வு செய்யப்பட்டதன் பின்னணி குறித்து திமுக வட்டாரங்களில் விசாரித்தோம்.
“கல்பனா கவுண்டர் சமுதாயம் என்பதால் மீண்டும் அதே சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்குத்தான் மேயர் பதவி வழங்க வேண்டும். இல்லாவிடின் திமுக கவுண்டர்களை புறக்கணிக்கிறது என்று தேவையில்லாத பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என சீனியர்களில் ஒரு தரப்பினர் கூறினர். அதேநேரத்தில் உளவுத்துறையும், சீனியர்களில் மற்றொரு தரப்பும் கவுண்டர், நாயுடு தவிர மாற்று சமுதாயத்துக்கு மேயர் வாய்ப்பு கொடுக்கலாம் என கூறினர். ஆனால் அதில் சரியான வேட்பாளர் அமையவில்லை. 2026 சட்டமன்ற தேர்தலையும் கவனித்தில் கொள்ள வேண்டியிருப்பதால், நாடாளுமன்ற தேர்தலில், கோவையில் அவர்கள் வார்டில் பாஜக, அதிமுக-வை விட அதிக வாக்குகள் வாங்கியவர்களாக இருக்க வேண்டும் என்பதில் தலைமை உறுதியாக இருந்தது.