“தமிழ்நாட்டில் இருபத்து ஐந்து சதவிகிதம் வாக்குகள் வாங்குவோம்… இரட்டை இலக்கத்தில் வெற்றிபெறுவோம் எனத் தலைமை சொன்னதை தொண்டர்கள் மட்டுமல்ல, டெல்லி தலைமையும் முழுவதுமாக நம்பி இந்தத் தேர்தலில் அவரது போக்கு ஒத்துழைப்பு தந்தனர். ஆனால், அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்ததோடு 11 தொகுதிகளில் டெபாசிட் இழந்திருக்கிறது பா.ஜ.க.” எனப் பேசத் தொடங்கிய சீனியர் ஒருவர், “இது மனதளவில் தொண்டர்களைச் சோர்வடையச் செய்திருக்கிறது. மற்ற மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும் நல்ல பலமான கூட்டணியாக இருந்ததை மாநிலத் தலைமைதான் ஒடைத்துவிட்டது. சீனியர்களை மதிப்பதில்லை, ஆடியோ, வீடியோ விவகாரங்கள் மூலம் கட்சியில் பலரும் கட்டம் கட்டப்பட்டார்கள், தலைமையை எதிர்த்தவர்களை வார் ரூம் நிர்வாகிகள் மூலம் அவதூறாகப் பேச வைத்தார்கள். அமித் ஷா, மோடிக்கு நெருக்கமாகத் தன்னைக் காட்டிக்கொண்டதால், தலைமைக்கு எதிராகப் புகார் கொடுக்கவே பலரும் அஞ்சினர். தமிழ்நாட்டில் பா.ஜ.க என இல்லாமல் தான்தான் எனத் தன்னை ப்ரமோட் செய்வதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தார். இதையெல்லாம் தொடர்ந்து டெல்லிக்குப் புகாராக அனுப்பியும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. தற்போது அதற்கான விலையை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். இப்போது தெரிந்திருக்கும் தமிழ்நாட்டில் பா.ஜ.க-வின் உண்மை நிலவரம். எனவே, தலைமையை மாற்ற வேண்டும் என்ற குரல் சீனியர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.” எனத் தொடர்ந்தார்.
“இந்தச் சூழலைப் பயன்படுத்தி, தமிழிசை, வானதி சீனிவாசன், இராம.சீனிவாசன், கருப்பு முருகானந்தம், ஸ்ரீதர் வேம்பு, நயினார் நாகேந்திரன் எனப் பலரும் மாநிலத் தலைமைப் பொறுப்புக்கு வரத் தங்களுக்கு நெருக்கமான வழிகளில் டெல்லியை அணுகியிருப்பதாகச் சொல்கிறார்கள்” என்றார்.