முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு! – News18 தமிழ்

சென்னையில் ஆக.18ம் தேதி நடைபெறும் கலைஞர் கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த், கமல்ஹாசனும் விழாவில் பங்கேற்கின்றனர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியிடும் நிகழ்ச்சி தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 18ம் தேதி மாலை 6.50 மணிக்கு நடைபெறுகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்று, கலைஞர் நூற்றாண்டு நாணயத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார். அமைச்சர் துரைமுருகன் முன்னிலை வகிக்கிறார்.

விளம்பரம்

விழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேயர், துணை மேயர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த விழாவில் கூட்டணி கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.

இதன் அடிப்படையில் அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு வீடு தேடி சென்று திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை, நடிகர் ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது.

விளம்பரம்

இதையும் படிக்க:
தமிழ்நாட்டில் புதிதாக உதயமான 4 மாநகராட்சிகள் – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

இதேபோல் கூட்டணிக் கட்சித் தலைவர்களான தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் முத்தரசன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட கட்சித் தலைவர்களுக்கு திமுக தலைமை சார்பில் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த விழாவை மிகச் சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *