கேரள மாநில தலைமைச் செயலாளராக இருப்பவர் டாக்டர் வி.வேணு. இவரது பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. அடுத்த தலைமைச் செயலாளராக யாரை நியமிக்கலாம் என, கேரள அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்பட்டது. அதில், சாரதா முரளிதரனை அடுத்த தலைமைச் செயலாளராக நியமிப்பது என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தலைமைச் செயலாளராக இருக்கும் வி.வேணுவின் மனைவிதான் சாரதா முரளிதரன். அடுத்த தலைமைச் செயலாளராக வி.வேணு-வின் மனைவி சாரதா முரளிதரன் பதவி ஏற்க உள்ளார்.
கணவரைத் தொடர்ந்து மனைவி தலைமைச் செயலாளராக பதவியேற்பது அரிது என்பதால், இந்தச் செய்தி கவனம் பெற்றுள்ளது. கேரளாவில் இதற்கு முன்பு, கணவர் தலைமைச் செயலாளர் பதவியில் இருந்த பிறகு சிறிது காலம் இடைவெளிக்குப் பின் மனைவி தலைமைச் செயலாளராக பதவியேற்ற நிகழ்வுகள் நடைபெற்றது உண்டு.
1984-ம் ஆண்டு முதல் 1987-ம் ஆண்டுவரை வி.ராமச்சந்திரன் தலைமைச் செயலாளராக இருந்தார். வி.ராமச்சந்திரனின் மனைவி பத்மா ராமச்சந்திரன் 1990-ம் ஆண்டு முதல் 1997-ம் ஆண்டு வரை தலைமைச் செயலாளராக இருந்தார். 2004 முதல் 2005 வரை பாபு ஜேக்கப் தலைமைச் செயலாளராக இருந்தார். அவரின் மனைவி லிஸி ஜேக்கப் 2006 முதல் 2007 வரை தலைமைச் செயலாளராக இருந்தார். ஆனால், கணவர் பதவி விலகிய உடனே அவரிடமிருந்து பதவியை மனைவி பெற்றுக்கொள்ளும் நிகழ்வு இதுதான் முதல் முறை.
தற்போது, பிளானிங் அடிஷனல் சீஃப் செக்கரட்டரியாக உள்ளார் சாரதா முரளிதரன். அவருக்கு 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சர்வீஸ் உள்ளது. கேரளா மாநிலத்தில் நியமிக்கப்படும் 5-வது பெண் தலைமைச் செயலாளர் சாரதா முரளிதரன். திருவனந்தபுரம் தைக்காடு பகுதியைச் சேர்ந்த கே.ஏ.முரளிதரன் – கே.ஏ.கோமதி தம்பதியின் மகள். திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்ற முதல் பெண் என்ற பெருமை பெற்றவர், சாரதாவின் தாய் கே.ஏ.கோமதி. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்ததன் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் சாரதா முரளிதரன். கோழிக்கோட்டைச் சேர்ந்த வேணு மற்றும் சாரதா முரளிதரன், 1990 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள். அவ்வருட தேர்வில் வேணு 26-ம் ரேங்க் பெற்றார், சாரதா 52-ம் ரேங்க் பெற்றார்.