தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக காத்திருக்கும் 80 ஆயிரம் முதியோருக்கு ஓய்வூதியம் எப்போது கிடைக்கும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மத்திய, மாநில அரசுகள் இணைந்து வழங்கும் முதியோர் ஓய்வூதியத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் கூடுதலாக 80 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்ததை சுட்டிக்காட்டியுள்ளார். இத்திட்டத்தின் கீழ் பயன் அடைய ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து காத்திருக்கும் நிலையில், சமூக பாதுகாப்பு வழங்குவதில் அரசு கால தாமதம் செய்வது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.
அண்டை மாநிலமான ஆந்திராவில் சமூக பாதுகாப்பு திட்டத்திற்கு தமிழ்நாட்டை விட 6 மடங்கு அதிக தொகை செலவிடப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள அன்புமணி, அவர்களிடம் தமிழ்நாடு அரசு பாடம் கற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
எனவே, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட அரசின் பல்வேறு திட்டங்களின்கீழ் ஓய்வூதியத்தின் அளவை 4 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி, விரைவில் அதனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
.
- First Published :